இலங்கையில் தடம் பதித்த தினத்தந்தி: அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து


இலங்கையில் தடம் பதித்த தினத்தந்தி: அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
x
தினத்தந்தி 25 Jan 2019 12:00 AM GMT (Updated: 24 Jan 2019 7:49 PM GMT)

சர்வதேச நாடுகளிலும் தனி முத்திரை பதிக்கும் வகையில் துபாயை தொடர்ந்து இலங்கையிலும் ‘தினத்தந்தி’ தனது தடத்தை பதித்து இருக்கிறது.

சென்னை,

சர்வதேச நாடுகளிலும் தனி முத்திரை பதிக்கும் வகையில் துபாயை தொடர்ந்து இலங்கையிலும் ‘தினத்தந்தி’ தனது தடத்தை பதித்து இருக்கிறது. ‘தினத்தந்தி’க்கு அரசியல் கட்சி தலைவர்களும், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

விஜயகாந்த்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

தமிழ் நாளிதழ்களில் அதிக வாசகர்களை கொண்டு சிறப்பான இடம் பிடித்து இருக்கும் ‘தினத்தந்தி’ துபாயில் தனது முதல் சர்வதேச பதிப்பை தொடர்ந்து, இரண்டாவது பதிப்பை இலங்கையில் தொடங்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. மேலும் உலகிலுள்ள அனைத்து தமிழர்கள், தமிழர்கள் வாழும் பகுதிகளில் தனது பதிப்பை தொடங்கி, தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் சேவையாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆர்.சரத்குமார்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

தமிழின் சிறப்பையும், தமிழரின் புகழையும் மென்மேலும் சர்வதேச அளவில் ஓங்க செய்யும் தினத்தந்தி நாளிதழுக்கும், தினத்தந்தி இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தனுக்கும், எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பல பதிப்புகள் தொடங்க வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஜவாஹிருல்லா

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்தியா மற்றும் இலங்கையில் தமிழ் பேசும் உறவுகளுக்கு செய்திகளை தாமதம் இன்றி கிடைக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ள தினத்தந்திக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மதுரை ஆதீனம்

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

‘தினத்தந்தி’, இலங்கை பதிப்பின் மூலம் தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள செய்திகள் இலங்கை மக்களுக்கு தாமதமின்றி கிடைக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார்கள். இது இந்தியா-இலங்கை நாடுகளில் உள்ள தமிழ் பெருமக்களிடையே நல்ல நட்புறவு வளர வாய்ப்பாக இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எர்ணாவூர் நாராயணன்

சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சி மாநிலத்தலைவர் மணி அரசன், வருமானவரித்துறை அதிகாரி பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

இலங்கை முன்னாள் முதல்-மந்திரி

இலங்கை கிழக்கு மாகாண முன்னாள் முதல்-மந்திரி நசிர் அகமது வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

அச்சு ஊடகத்துறையில் பாரம்பரிய வரலாற்று சாதனைகளை நிகழ்த்தி வரும் இலங்கை வீரகேசரி மற்றும் தென்னிந்திய தினத்தந்தி இணைந்து சாதனை ஒன்றை நிகழ்த்தி இருக்கிறது. இந்த சாதனை தமிழ் ஊடகத்துறை வரலாற்றில் ஒரு மைல்கல் எனலாம். ஒரே நேரத்தில் தமிழக மற்றும் இலங்கை செய்திகளை வாசிக்கும் வாய்ப்பு வாசகர்களுக்கு கிடைத்திருப்பது பாராட்டுக்குரியது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேல் மாகாண சபை உறுப்பினர்

இலங்கை மேல் மாகாண சபை உறுப்பினர் சண்.குகவரதன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

1942-ம் ஆண்டு தமிழ் செழிக்கும் மதுரை மண்ணில் ஆரம்பிக்கப்பட்டு இந்தியாவில் அதிக விற்பனையிலுள்ள தமிழ் நாளிதழ் தினத்தந்தி இந்திய மண்ணில் வாழும் எமது தொப்புள் கொடி உறவுகளான தமிழ் சொந்தங்களுக்கு தான் ஆற்றி வரும் வெல்க தமிழ் என்ற முதுமொழியை முன்னிறுத்தி தனது ஊடக பணியை ஆற்றி வருகிறது. இத்துடன் வீரகேசரியுடன் இணைந்து கைகோர்த்து இலங்கை மண்ணில் வெளிவருவது இலங்கை-இந்தியா வரலாற்றில் ஒரு புதிய மைல் கல்லாகவே தமிழர்கள் பார்க்கிறார்கள்.

எனவே தமிழ் மக்களின் பிரதிநிதி என்ற முறையிலும், மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நெருங்கிய நட்பு கொண்ட இலங்கை, யாழ்ப்பாணம், நவாலியூர் சோமசுந்தர புலவரின் பூட்டன் ரீதியிலும் தினத்தந்தியின் நிர்வாகத்துக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story