இந்து ஆன்மிக கண்காட்சியை முன்னிட்டு 10 ஆயிரம் மாணவிகள் பங்கேற்ற தேவகானம் நிகழ்ச்சி


இந்து ஆன்மிக கண்காட்சியை முன்னிட்டு 10 ஆயிரம் மாணவிகள் பங்கேற்ற தேவகானம் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 25 Jan 2019 9:30 PM GMT (Updated: 25 Jan 2019 6:35 PM GMT)

சென்னையில் நடக்கவிருக்கும் இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியின் முன்னோட்டமாக பிரபல கர்நாடக மற்றும் திரை இசை பாடகிகளுடன் 10 ஆயிரம் மாணவிகள் கலந்துகொண்டு பாடிய தேவகானம் நிகழ்ச்சி நடந்தது.

சென்னை, 

10-வது இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் வருகிற 30-ந் தேதி தொடங்கி, அடுத்த மாதம் 4-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியை காஞ்சி மடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தொடங்கி வைக்கிறார். கண்காட்சிக்கு லட்சக்கணக்கான மக்களை வரவழைப்பதற்காக பல்வேறு முன்னோட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு அங்கமாக சென்னை, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு 22 விவேகானந்தர் ரதங்கள் சென்று, இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் இந்த ரதம், 500-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது.

இதைப்போல பண்பு சார்ந்த நீச்சல் போட்டி, யோகாசன பயிற்சி போன்ற முன்னோட்ட நிகழ்ச்சிகளை தொடர்ந்து, ‘பாரதிய சம்ஸ்கார கானம்’ என்ற தேவகானம் இசை நிகழ்ச்சி மீனம்பாக்கத்தில் உள்ள ஏ.எம்.ஜெயின் கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. இசைப்பேரொளி, யுவகலா பாரதி போன்ற பல விருதுகளை பெற்ற கர்நாடக இசைக் கலைஞர்கள் விதுஷி, டாக்டர் எஸ்.சவுமியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பிரபலமான கர்நாடக மற்றும் திரை இசை பாடகிகளான வித்யா கல்யாணராமன், வினயா கார்த்திக், கிருத்திகா நடராஜன், சிந்துஜா ஏகாம்பரம், சுசித்ரா பாலசுப்பிரமணியம் ஆகியோர் மேடையில் இருந்து பாட, 10 ஆயிரம் மாணவிகளும் அவர்களோடு இணைந்து பாடினார்கள். ரவி சங்கர், அஞ்சனி, அஸ்வினி ஆகியோர் இசைக்குழுவை இயக்கினர். ‘இசை மழலை’ என்ற இசைக்குழுவின் நிறுவனர் ராம்ஜி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வழங்கினார்.

இந்து ஆன்மிக மற்றும் சேவை அறக்கட்டளையின் துணைத் தலைவரும், பண்பு மற்றும் கலாசார பயிற்சி முனைவு அறக்கட்டளையின் அறங்காவலருமான ராஜலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். தமிழ், சமஸ்கிருதம், இந்தி, மராத்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம், பஞ்சாபி மற்றும் பெங்காலி ஆகிய 9 மொழிகளில் 19 பாடல்கள் பாடப்பட்டன.

முன்னதாக பல்வேறு பள்ளிகளின் இசை ஆசிரியர்களை வரவழைத்து மாணவிகளுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டது. அதேபோன்று ராம்ஜியின் மாணவர்கள் ஏராளமான பள்ளிகளுக்கு சென்று ஆசிரியர்களுக்கும், மாணவிகளுக்கும் பயிற்சி அளித்ததுடன் ஒத்திகைகளும் பார்க்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை இந்து ஆன்மிக மற்றும் சேவை அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.

Next Story