உலக முதலீட்டாளர் மாநாட்டில் எத்தனை ஒப்பந்தங்கள் கையெழுத்தானது? அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு


உலக முதலீட்டாளர் மாநாட்டில் எத்தனை ஒப்பந்தங்கள் கையெழுத்தானது? அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 25 Jan 2019 10:00 PM GMT (Updated: 25 Jan 2019 8:46 PM GMT)

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் எத்தனை ஒப்பந்தங்கள் கையெழுத்தானது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

சென்னை, 

தமிழக அரசு கடந்த 23 மற்றும் 24-ந் தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தியது. இந்த மாநாட்டுக்கு தடை கேட்டு சிங்கப்பூரைச் சேர்ந்த ‘கேஸ்கெட் எனர்ஜி’ என்ற தனியார் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் கடந்த வாரம் வழக்கு தொடர்ந்தது.

அதில், “2015-ம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழக அரசு நடத்தியது. அதில் கலந்துகொண்ட போலி நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து முதலீடுகளை பெற்று மோசடி செய்துள்ளன. எனவே, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளும் தனியார் நிறுவனங்கள் குறித்தும், அதன் குற்றப்பின்னணி குறித்தும் ஆராய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். அதுவரை இந்த மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தது.

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் விசாரித்தனர். பின்னர் நீதிபதிகள் நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. அதனால், மனுவை தள்ளுபடி செய்கிறோம்.

அதேநேரம், வழக்கு விசாரணையின்போது, கடந்த 2015-ம் ஆண்டு தமிழக அரசு நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம், தொழில் துறை, எரிசக்தி துறை, தகவல் தொடர்புத்துறை, விவசாயம் உள்பட 7 துறைகளில் ரூ.2.42 லட்சம் கோடி மதிப்புள்ள 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. இதன்மூலம் 4 லட்சத்து 70 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது என்று அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் கூறினார்.

அதுபோல, 2019-ம் ஆண்டு நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிலும், பல லட்சம் கோடி ரூபாய் முதலீடும், பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

தமிழகத்தில் தொழில் வளத்தையும், வேலைவாய்ப்பையும் உயர்த்துவதற்காக பல கோடி ரூபாய் செலவு செய்து, 2019-ம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழக அரசு நடத்தி உள்ளது.

எனவே, கடந்த 2015-ம் ஆண்டு நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி எத்தனை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன?, அதன்படி எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது?, அவற்றின் தற்போதைய நிலை என்ன?

அதுமட்டுமல்ல, கடந்த 23, 24-ந் தேதிகளில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், எத்தனை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன?, அதன் மூலம் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்? என்பது உள்ளிட்ட விவரங்களை கொண்ட அறிக்கையை தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் வருகிற ஜூன் 10-ந் தேதி தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி உள்ளனர்.

Next Story