திருமணமாகி 16 ஆண்டுகளுக்கு பின்னர் மனைவி ஒத்துழைக்கவில்லை என்று கூறி விவாகரத்து கேட்பதை ஏற்க முடியாது ஐகோர்ட்டு தீர்ப்பு


திருமணமாகி 16 ஆண்டுகளுக்கு பின்னர் மனைவி ஒத்துழைக்கவில்லை என்று கூறி விவாகரத்து கேட்பதை ஏற்க முடியாது ஐகோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 26 Jan 2019 10:15 PM GMT (Updated: 26 Jan 2019 8:24 PM GMT)

திருமணம் முடிந்து 16 ஆண்டுகளுக்கு பிறகு, தாம்பத்திய உறவுக்கு மனைவி ஒத்துழைக்கவில்லை என்று கூறி விவாகரத்து கேட்பதை ஏற்க முடியாது என்று ஐகோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.

சென்னை

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் குணா. கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார். இவருக்கும் அதேபகுதியைச் சேர்ந்த வனிதா ( இருவரது பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன) என்பவருக்கும் 1997-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 1999-ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில், தனது மனைவி தாம்பத்திய உறவுக்கு ஒத்துழைக்க மறுக்கிறார் என்று காரணம் கூறி தனக்கு விவாகரத்து வழங்ககோரி குடும்ப நல கோர்ட்டில் குணா வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் வனிதா தாக்கல் செய்த பதில் மனுவில், “கணவருக்கும் அவரது அத்தை மகளுக்கும் கள்ளத் தொடர்பு உள்ளது. செல்போனில் தொடர்ந்து பேசுகின்றனர். அந்த பெண்ணுக்கு பல நூறு குறுஞ்செய்தியையும் இவர் அனுப்பியுள்ளார். எனவே, கணவர் கூறும் குற்றச்சாட்டு ஏற்கக்கூடியதல்ல. அவர் மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பாதிக்கிறார். எனவே, எனக்கும் எனது மகளுக்கும் மாதம் ரூ.30 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட வேண்டும்” என்று கூறினார்.

இந்த வழக்கை விசாரித்த ஈரோடு கோர்ட்டு, தன் மகளின் பராமரிப்புக்காக குணா மாதம் தோறும் ரூ.7,500 ஜீவனாம்சம் வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டது.

இதை எதிர்த்து குணா ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.சுப்பையா, சி.சரவணன் ஆகியோர் விசாரித்து தீர்ப்பு அளித்தனர். அதில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது:-

மனுதாரருக்கு திருமணமாகி 16 ஆண்டுகள் ஆகிவிட்டன. வயதுக்கு வந்த மகள் உள்ளார். இந்நிலையில், தனது மனைவி தாம்பத்திய உறவுக்கு ஒத்துழைக்க மறுக்கிறார் என்று கூறி விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளார்.

திருமணம் ஆகி ஒருசில ஆண்டுகளில் இந்த காரணத்தைக் கூறி விவாகரத்து கேட்கலாம். அதற்காக இதுபோல காரணங்களை கூறி 16 ஆண்டுகளுக்கு பின்னர் வழக்கு தொடர்வதை ஏற்க முடியாது. வயது, உடல்நிலை, குழந்தையை வளர்ப்பதற்கான கூடுதல் பொறுப்பு போன்ற சூழ்நிலைகள் மனைவிக்கு ஏற்பட்டிருக்கும்போது, இதுபோன்ற குறைகளை கூறி விவாகரத்து பெற முடியாது என்று ஏற்கனவே ஒரு வழக்கில் ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்ச் தெளிவாக தீர்ப்பு அளித்துள்ளது.

எனவே, ஈரோடு குடும்ப நல கோர்ட்டு அளித்த தீர்ப்பை உறுதி செய்கிறோம். மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Next Story