அமைச்சர் விஜயபாஸ்கர் வாக்குமூலத்தை வழங்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு வாபஸ் 5-ந் தேதி ஆஜராக ஆணையம் உத்தரவு


அமைச்சர் விஜயபாஸ்கர் வாக்குமூலத்தை வழங்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு வாபஸ் 5-ந் தேதி ஆஜராக ஆணையம் உத்தரவு
x
தினத்தந்தி 28 Jan 2019 11:00 PM GMT (Updated: 28 Jan 2019 7:02 PM GMT)

அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் வாக்குமூலத்தை வழங்கக்கோரி ஆணையத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவை அவரது வக்கீல்கள் திரும்ப பெற்றுக்கொண்டனர்.

சென்னை, 

அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் வாக்குமூலத்தை வழங்கக்கோரி ஆணையத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவை அவரது வக்கீல்கள் திரும்ப பெற்றுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து 5-ந் தேதி ஓ.பன்னீர்செல்வம் ஆஜராக நீதிபதி ஆறுமுகசாமி உத்தரவிட்டுள்ளார்.

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. விசாரணைக்காக இன்று(செவ்வாய்க்கிழமை) துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராக ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையே 25-ந் தேதி ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆணையத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் டாக்டர் ராதா கிருஷ்ணன், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் ஆணையத்தில் அளித்த வாக்குமூலத்தின் நகலை தனக்கு வழங்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஆறுமுகசாமி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான வக்கீல்கள், அந்த மனுவை திரும்ப பெற்றுக்கொள்வதாக தெரிவித்தனர். இதை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.

இதன்பின்பு நீதிபதி, ‘ஆணையத்தின் விசாரணை இறுதி கட்டத்துக்கு வந்துள்ளது. இதனால், 21 சிறப்பு மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவை ஏற்படுத்த வேண்டும் என்று அப்பல்லோ நிர்வாகம் தாக்கல் செய்த மனுவை ஆணையம் தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து அப்பல்லோ நிர்வாகம் மேல்முறையீடு செய்ய உள்ளதா? என்பதை பார்க்க வேண்டியது உள்ளது. எனவே, 28-ந் தேதி(இன்று) ஓ.பன்னீர்செல்வத்திடம் நடைபெறுவதாக இருந்த விசாரணை 5-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது’ என்றார்.

இதன்பின்பு சசிகலா தரப்பு வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

விசாரணையை தாமதப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருக்குமோ? என்று கருதினோம். ஆனால், அவர்களாகவே மனுவை வாபஸ் பெற்று விட்டனர்.

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகனராவ் ஆகியோரை எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும் என்று ஆணையத்தின் வக்கீல் தாக்கல் செய்த மனுவை பொறுத்தமட்டில் அவர்கள் மீது எதிர்மறை கருத்துகள் இருக்கிறது என்று முடிவுக்கு ஆணையம் வரவில்லை. இதுதொடர்பாக இறுதியாக முடிவு செய்து கொள்ளலாம் என்று ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோடநாடு கொலைக்கும், ஜெயலலிதா மரணத்துக்கும் சம்பந்தம் இருப்பதாக கனிமொழி கூறி இருக்கிறார். அவரது சந்தேகத்தை போக்க வேண்டியது ஆணையத்தின் கடமை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story