நாடாளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து தமிழக அரசு அதிகாரிகளுடன் தேர்தல் கமிஷன் ஆலோசனை


நாடாளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து தமிழக அரசு அதிகாரிகளுடன் தேர்தல் கமிஷன் ஆலோசனை
x
தினத்தந்தி 28 Jan 2019 10:45 PM GMT (Updated: 28 Jan 2019 7:29 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலுக்கான தயார் நிலை குறித்து தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன், இந்திய தேர்தல் கமிஷன் ஆலோசனை நடத்தி உள்ளது.

சென்னை, 

சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு, தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:-

நாடாளுமன்ற தேர்தல் தயார் நிலை குறித்து இந்திய தேர்தல் ஆணையத்தின் அனைத்து அதிகாரிகளும், மாநிலங்களில் உள்ள உயர் அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில், தலைமைச் செயலாளர், டி.ஜி.பி., வருமான வரித்துறை அதிகாரிகள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அதிகாரிகள், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோர் கலந்துகொண்டோம்.

இது, தேர்தல் தயார் நிலையை மதிப்பிடும் கூட்டமாகும். தேர்தல் நடத்துவதற்கான நிதி, சட்டம்-ஒழுங்கும், தேவையான அளவில் எலட்ரானிக் ஓட்டு எந்திரம், சிறப்புத் தேவைகள் ஆகியவை பற்றி தெரிந்துகொள்வதற்காக சாதாரணமாக தேர்தலுக்கு முன்பு இதுபோன்ற கூட்டங்கள் நடைபெறும்.

தேர்தல் நடத்துவதற்கு தமிழகத்துக்குத் தேவையான அனைத்து அம்சங்களுமே உள்ளன என்பதை தெரிவித்துள்ளோம். நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வி.வி.பி.ஏ.டி. என்ற வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரம் வைக்கப்படும்.

நாடாளுமன்றத் தேர்தலுடன், 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தலையும் நடத்தும் நிலை ஏற்பட்டாலும் அதற்கும் தயாராக இருக்கிறோம். இரண்டு தேர்தலையும் ஒன்றாக நடத்துவது குறித்து இந்திய தேர்தல் கமிஷன்தான் முடிவு செய்யும்.

அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் தகுதி இழப்புக்குப் பிறகு, ஓசூர் தொகுதி காலியான அதிகாரப்பூர்வ தகவலை சட்டசபை செயலகம் எங்களுக்கு அளிக்க வேண்டும். அந்தத் தகவல் இன்னும் வரவில்லை. வந்த பின்னர் அதை இந்திய தேர்தல் கமிஷனுக்கு நான் அனுப்பி வைப்பேன். அதன்பிறகு அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்படும்.

தேர்தல் பணியாற்றும் அரசு ஊழியர், ஆசிரியர்கள் ஓரிடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி இருந்தால் அவர்களை பணியிடமாற்றம் செய்வது குறித்து மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பு அதை நடைமுறைப்படுத்த வேண்டும்.

31-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதைத் தொடர்ந்து புதிய வாக்காளர்கள் தங்கள் வாக்காளர் அடையாள அட்டையை இ-சேவை மையங்கள் மூலம் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். அதில் மாற்றங்கள் தேவை என்றால், ரூ.25 செலுத்தி திருத்தம் செய்யலாம். தற்போது நடக்கும் அரசு ஊழியர், ஆசிரியர் போராட்டத்தினால் எங்களுக்கு பாதிப்பு இல்லை. எங்களுக்குத் தேவையான பணிகள் முடிந்துவிட்டன. ஆனால் தேர்தல் நேரத்தில் அவர்களின் உதவி தேவைப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story