வெளிநாடுகளில் வேலை வாங்கித்தருவதாக பட்டதாரி வாலிபர்களிடம் ரூ.3 கோடி மோசடி தப்பி ஓடிய மோசடி நபர் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்


வெளிநாடுகளில் வேலை வாங்கித்தருவதாக பட்டதாரி வாலிபர்களிடம் ரூ.3 கோடி மோசடி தப்பி ஓடிய மோசடி நபர் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்
x
தினத்தந்தி 28 Jan 2019 9:45 PM GMT (Updated: 28 Jan 2019 7:56 PM GMT)

வெளிநாடுகளில் வேலை வாங்கித்தருவதாக கூறி பட்டதாரி வாலிபர்களிடம் ரூ.3 கோடியை சுருட்டிக்கொண்டு மேற்கு வாங்காள மாநிலத்தைச் சேர்ந்த மோசடி நபர் தப்பி ஓடிவிட்டார்.

சென்னை, 

வெளிநாடுகளில் வேலை வாங்கித்தருவதாக கூறி பட்டதாரி வாலிபர்களிடம் ரூ.3 கோடியை சுருட்டிக்கொண்டு மேற்கு வாங்காள மாநிலத்தைச் சேர்ந்த மோசடி நபர் தப்பி ஓடிவிட்டார். அவர் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேற்று 100-க்கும் மேற்பட்ட பட்டதாரி இளைஞர்களும், இளம்பெண்களும் திரண்டு வந்தனர். அவர்கள் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

ஜோசுவா ஸ்ரீதர் என்பவர் சென்னை சைதாப்பேட்டையில் வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றை நடத்திவந்தார். இங்கிலாந்து, கனடா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் படித்த இளைஞர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு இருக்கிறது என்றும், அவர்களுக்கு கைநிறைய சம்பளம் கிடைக்கும் என்றும் இணையதளத்தில் அவர் விளம்பரப்படுத்தினார்.

அதைப் பார்த்து 100-க்கும் மேற்பட்ட பட்டதாரி இளைஞர்களும், இளம்பெண்களும் ஜோசுவா ஸ்ரீதர் நடத்திவந்த வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோம்.

பதிவு செய்த ஒவ்வொருவரிடமிருந்தும் வேலைக்கு தகுந்தார்போல் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வசூல் செய்தார். ஜனவரி மாதம் அனைவருக்கும் ‘விசா’ கிடைத்துவிடும் என்று கூறிவந்தார். ஆனால், கடந்த டிசம்பர் மாதமே சைதாப்பேட்டையில் இயங்கிவந்த அவரது அலுவலகத்திற்கு வராமல் தப்பி ஓடிவிட்டார்.

அவர் அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கும் அவர் தப்பி ஓடிய விஷயம் தெரியவில்லை. யாருக்கும் சந்தேகம் வராதபடி அனைவரிடமும் தொடர்ந்து செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். ரூ.3 கோடி வரை பணத்தை சுருட்டிக்கொண்டு அவர் ஓட்டம் பிடித்திருக்கிறார். ஏற்கனவே அவர் மீது பெங்களூரு போலீசில் மோசடி புகார் உள்ளது.

அவரது உண்மையான பெயர் பானர்ஜி. ஜோசுவா ஸ்ரீதர் என்ற பெயரில் சென்னையில் ஆதார் அட்டை, பான்கார்டு போன்றவற்றை வாங்கியுள்ளார். வங்கி கணக்கும் தொடங்கியுள்ளார். அவரிடம் 180 பேர் வரை பணம் கொடுத்து ஏமாந்து உள்ளோம். அவரை கண்டுபிடித்து அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகார் கொடுக்க வந்தவர்களில் பெரும்பாலானோர் தங்களது பெற்றோருக்கு தெரியாமல் பணத்தை கொடுத்து இந்த மோசடி வலையில் விழுந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக விசாரணை நடத்தும்படி மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Next Story