கழிவறையை பயன்படுத்த தெரியாததால் துவாரத்தில் கால் சிக்கிய ஆந்திர பெண் ரெயிலில் தவிப்பு ½ மணி நேரம் போராடி மீட்ட ஊழியர்கள்


கழிவறையை பயன்படுத்த தெரியாததால் துவாரத்தில் கால் சிக்கிய ஆந்திர பெண் ரெயிலில் தவிப்பு ½ மணி நேரம் போராடி மீட்ட ஊழியர்கள்
x
தினத்தந்தி 29 Jan 2019 10:15 PM GMT (Updated: 29 Jan 2019 8:40 PM GMT)

சென்னை சென்டிரலில், ‘வெஸ்டன்’ கழிவறையை பயன்படுத்த தெரியாததால் ஆந்திராவை சேர்ந்த பெண் ஒருவர் ரெயில் பெட்டியில் சிக்கி தவித்தார். அவரை ½ மணி நேரம் போராடி ரெயில்வே ஊழியர்கள் மீட்டனர்.

சென்னை,

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் நேற்று மாலை சார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட தயாராக இருந்தது. இந்த ரெயிலில் பயணம் செய்ய இருந்த ஆந்திராவை சேர்ந்த பாரதம்மா(வயது 40) என்ற பெண், ரெயில் பெட்டியில் இருந்த கழிவறைக்கு (வெஸ்டன் டாய்லெட்) இயற்கை உபாதை கழிக்க சென்றார்.

அந்த கழிவறையை முறையாக பயன்படுத்த தெரியாததால், பாரதம்மாவின் வலது கால் கழிவறை துவாரத்தில் சிக்கி கொண்டது. காலை வெளியே எடுக்க முடியாமல் பாரதம்மா தவித்தார். ஒருகட்டத்தில் சத்தம்போட்டு கத்தினார். அவரது அபாய குரலை கேட்டு சக பயணிகள் கதவை திறந்து பார்த்தனர்.

பரிதாப காட்சி

அங்கே கழிவறைக்குள் ஒரு கால் சிக்கியபடி, பாரதம்மா பரிதவித்து கொண்டிருந்தார். இதையடுத்து சென்டிரலில் இருந்த ரெயில்வே பணியாளர்கள் சார்மினார் எக்ஸ்பிரசுக்கு விரைந்தனர். அதேநேரம் மருத்துவ உதவியாளர்கள் கழிவறையில் சிக்கியிருந்த பாரதம்மாவின் காலை மீட்க போராடினார்கள். ஆனால் முடியவில்லை.

இதையடுத்து ரெயில்வே பணியாளர்கள் கழிவறையின் இரும்பு மூடியை அப்படியே பெயர்த்து எடுத்தனர். இதனால் பாரதம்மாவின் காலுடனே அந்த கழிவறையின் இரும்பு மூடியும் அப்படியே வந்தது. இதையடுத்து பாரதம்மா அருகில் இருந்த மருத்துவ சிகிச்சை மையத்துக்கு சென்றார். காலில் சிக்கியிருந்த கழிவறை பகுதியுடன் சிகிச்சைக்கு சென்ற பாரதம்மாவை சக பயணிகள் பரிதாபத்துடன் பார்த்தனர்.

தர்ம சங்கடத்தில்...

கழிவறையில் சிக்கிய பாரதம்மாவின் காலை மீட்க நடந்த போராட்டத்தால் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. அந்தவகையில் நேற்று மாலை 6.10 மணிக்கு புறப்பட்டு செல்லவேண்டிய சார்மினார் எக்ஸ்பிரஸ், 35 நிமிடங்கள் தாமதமாக மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு சென்றது.

மேற்கத்திய கழிவறையை சரியாக உபயோகிக்க தெரியாததால் பாரதம்மா இந்த தர்ம சங்கடத்தில் மாட்டிக்கொண்டார். காலில் இருந்த கழிவறை பகுதி அகற்றப்பட்ட சில நிமிடங்களிலேயே பாரதம்மா சென்டிரலில் இருந்து வேகமாக புறப்பட்டு சென்றார்.

இந்த சம்பவம் நேற்று சென்டிரலில் பரபரப்பாக பேசப்பட்டது.

Next Story