அமெரிக்காவில் தமிழ் மொழிக்கு கிடைத்த சிறப்பு ; கவிஞர் வைரமுத்து நன்றி


அமெரிக்காவில்  தமிழ் மொழிக்கு கிடைத்த சிறப்பு ; கவிஞர் வைரமுத்து நன்றி
x
தினத்தந்தி 30 Jan 2019 9:16 AM GMT (Updated: 30 Jan 2019 9:16 AM GMT)

அமெரிக்காவில் நடப்பு ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு மாதமாக வடக்கு கரோலினா மாநிலம் அறிவித்துள்ளது. இதற்கு கவிஞர் வைரமுத்து நன்றி தெரிவித்து உள்ளார்.

வாஷிங்டன்,

வடக்கு கரோலினா பகுதியில் தமிழர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இதன் காரணமாக, ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு மாதமாக அறிவிக்க வேண்டும் என அங்குள்ள தமிழ்ச்சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. அதனைத் தொடர்ந்து, மாநில ஆளுநராக உள்ள ராய் கூப்பர் தமிழ்ச்சங்கத்தின் கோரிக்கையை ஏற்றார். பின்னர் நடப்பு ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு மாதமாக கரோலினா அரசு அறிவித்துள்ளது.

இதற்கான ஆணையை ஆளுநர் ராய் கூப்பர் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், உலகில் நெடுங்காலமாக பேசப்பட்டும் எழுதப்பட்டும் வரும் பெருமையைக் கொண்ட மொழிகளுள் ஒன்று தமிழ். வடக்கு கரோலினா மாநிலத்தின் வளர்ச்சியில் தமிழர்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்திருக்கின்றனர் என கூறினார். மேலும் இது தொடர்பான வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில், ‘தமிழர்களின் அடையாளம் தமிழ் மொழி. 

உலகில் இன்னும் பயன்பாட்டில் இருக்கும் பழமையான மொழிகளில் ஒன்றும் கூட. வடக்கு கரோலினாவில் வசிக்கும் தமிழர்கள் சிறப்பு மிக்க தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் இங்கு பாதுகாத்து வளர்த்துள்ளனர். தமிழ் மொழியும் நமது கலாச்சார வரலாற்று வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளது. அதன்படி, தமிழர்களோடு இணைந்து தைப்பொங்கலை கொண்டாடுவதில் மகிழ்ச்சி’ என தெரிவித்துள்ளார்.


 ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு மாதமாக அறிவித்த வடக்கு கரோலினா மாநில ஆளுனருக்கு கவிஞர் வைரமுத்து நன்றி தெரிவித்து உள்ளார்.

வைரமுத்து தனது ட்விட்டரில் கூறி இருப்பதாவது:-

ஜனவரியைத் தமிழ்ப்பண்பாட்டு மாதமாக அறிவித்திருக்கும் அமெரிக்க வடகரோலினா ஆளுநர் ராய் கூப்பர் அவர்களுக்கு என் நன்றி. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று உலகத்தைச் சிந்தித்த தமிழை இன்று உலகம் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறது. இது தமிழுக்குப் பெருமை என கூறி உள்ளார்.

Next Story