அரசு ஊழியர் - ஆசிரியர்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் இன்று முதல் பணிக்கு திரும்புகிறார்கள்


அரசு ஊழியர் - ஆசிரியர்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் இன்று முதல் பணிக்கு திரும்புகிறார்கள்
x
தினத்தந்தி 31 Jan 2019 12:15 AM GMT (Updated: 30 Jan 2019 6:58 PM GMT)

அரசு ஊழியர்-ஆசிரியர்களின் வேலை நிறுத்த போராட்டம் நேற்று வாபஸ் பெறப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று முதல் அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்புகிறார்கள்.

சென்னை, 

ஜாக்டோ-ஜியோ அமைப்பின் கீழ் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 22-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.

மேலும், ஒவ்வொரு நாளும் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் செய்ததால், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 1,500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருக்கின்றனர். அவர்கள் மீது கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் 9-வது நாட்களாக நேற்றும் வேலைநிறுத்தம் நீடித்தது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதோடு மட்டுமில்லாமல், ஆர்ப்பாட்டமும் நேற்று நடத்தினார்கள்.

கோரிக்கைகள் தொடர்பாக முதல்-அமைச்சர் அழைத்து பேசி தீர்வு காண வேண்டும் என்று ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘அர்ப் பணிப்பு உணர்வோடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்தார்.

இதேபோல், எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினும் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற வேண்டும் என்றும் வேண்டுகோளாக வைத்தார்.

இந்த சூழ்நிலையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் உயர்மட்டக்குழு கூட்டம் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மாயவன், சுப்பிரமணியம், அன்பரசு, தியாகராஜன், ரெங்கராஜன், வின்சென்ட் பால்ராஜ் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதில் வேலைநிறுத்தத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும், ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளான அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை அதில் இருந்து எப்படி விடுவிப்பது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அன்பரசு, வின்சென்ட் பால்ராஜ் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த 9 நாட்களாக வேலைநிறுத்த போராட்டம் நடந்தது. தமிழக முதல்-அமைச்சர் கோரிக்கைகள் தொடர்பாக அழைத்து பேச வேண்டும் என்று சொன்னோம். ஆனால் அழைத்து பேசவில்லை. அதற்கு பதிலாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை அரசு எடுத்து இருக்கிறது.

வருகிற வாரத்தில் செய்முறை தேர்வு தொடங்க இருப்பதால் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டும், பெற்றோர் மன உணர்வை கருத்தில் கொண்டும், நீதிபதி வழிகாட்டுதல், முதல்-அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உள்பட அனைத்து கட்சி தலைவர்களின் வேண்டுகோளையும் ஏற்று காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுகிறோம். எங்கள் கோரிக்கைகள் அப்படியே தான் இருக்கிறது.

போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே முதல்-அமைச்சரின் வேண்டுகோளுக்கு அர்த்தமாக இருக்கும்.

வேலைநிறுத்தம் தொடங்குவதற்கு முந்தைய நாளான 21-ந் தேதியன்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எந்த நிலையில் இருந்தார்களோ? அந்த நிலையில் அவர்கள் இருக்க வேண்டும். நாளை(இன்று) முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிக்கு திரும்புவார்கள்.

நாங்கள் கடந்த போராட்டங்களின் போது எத்தனையோ முதல்-அமைச்சர்களை சந்தித்து இருக்கிறோம். அவர்களெல்லாம் நேரடியாக நெஞ்சில் தான் குத்தினார்கள். ஆனால் இப்போது இருக்கும் அரசோ, எங்களை முதுகில் குத்தி இருக்கிறது.

15 ஆண்டுகாலமாக நாங்கள் கேட்ட 25 ஆயிரம் கோடி ரூபாய் எங்கே இருக்கிறது என்பதை அரசு சொல்லி இருக்கிறது. இது எங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி. விரைவில் இந்த அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லையென்றால், மீண்டும் போராட்டம் தொடரும்.

அதேபோல், பணிக்கு திரும்புபவர்கள் மீது பணி நீக்கம் உள்பட ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் எங்களுடைய போராட்டம் மீண்டும் நடக்கும். ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படாது என்று பிரத்தியேகமாக அரசு ஒரு அறிக்கையை வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தமிழ்நாடு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் மாநில மையச் சங்கம், தமிழ்நாடு அரசு துறை ஊர்தி ஓட்டுனர் சங்கம், தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம், தமிழ்நாடு அரசு அலுவலர் கழகம் (சி மற்றும் டி பிரிவு), தமிழ்நாடு அரசு தலைமைச் செயலக ஊர்தி ஓட்டுனர் சங்கம் ஆகிய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 6 சங்கங்கள் இணைந்து, 30-ந் தேதியன்று (நேற்று) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதிப்பதாக தனியாக அறிவித்தன.

இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில், அனைத்து அரசுத் துறைச் செயலாளர்களுக்கும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார்.

அதில், அரசு ஊழியர் விதிகள் மீறலில் ஈடுபடும் ஊழியர் மீது நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர்கள் வேலைக்கு வராத நாளை, அங்கீகரிக்கப்படாத விடுமுறையாக கருத வேண்டும். வேலை செய்யாவிட்டால் சம்பளம் இல்லை என்ற அடிப்படையில் அவர்களுக்கு சம்பளமோ, சலுகையோ வழங்கப்படக் கூடாது என்று கூறியிருந்தார்.

இந்த நெருக்கடியில், அரசு ஊழியர்களின் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் எப்படி நடக்கும் என்று நேற்று காலையில் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தலைமைச் செயலகத்தைப் பொறுத்தவரையில் காலையில் இருந்தே போராட்டம் பிசுபிசுத்துவிட்டது. இந்த போராட்டத்துக்கு அரசு ஊழியர்களின் ஆதரவு போதிய அளவில் கிடைக்கவில்லை.

வழக்கமாக தலைமைச் செயலகத்துக்கு காலை 9.45 மணிக்கு வரும் ஊழியர்கள் நேற்று காலை 9 மணிக்கே வந்தனர். காலை 11 மணியளவில் 91 சதவீத ஊழியர்கள் தலைமைச் செயலகத்துக்கு வந்து வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டு விட்டனர்.

தமிழகம் முழுவதுமே அரசு ஊழியர்கள், ஆசிரியர்களில் 4 சதவீத ஊழியர்கள் (சுமார் 32 ஆயிரம் பேர்) மட்டுமே பணியாற்ற வரவில்லை என்றும் 95 சதவீதம் பேர் பணிக்கு வந்தனர் என்றும் அரசு அதிகாரி தெரிவித்தார்.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத் தலைவர் சண்முகராஜன், தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத் தலைவர் பீட்டர் அந்தோணிசாமி, தமிழ்நாடு அரசுத் துறை ஊர்தி ஓட்டுனர் சங்கத் தலைவர் பாலமுருகன் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் நேற்று மாலையில் கூட்டாக அளித்த பேட்டி வருமாறு:-

முதல்-அமைச்சரின் கனிவான வேண்டுகோளை ஏற்றும், தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தயாரிப்புப் பணிகளை கருதியும், அரசு அலுவலர்கள், மாணவர்களின் நலன் கருதியும் எவ்விதமான தொடர் போராட்டத்திலும் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் ஈடுபடுவதில்லை என்று அறிவிக்கிறோம்.

நிதிநிலை சீரானவுடன் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து உதவி செய்வோம் என்று அமைச்சரே அறிவித்துவிட்டார். எனவேதான் போராட்டத்தை நிறுத்துகிறோம். இதில் யாருக்கும் வெற்றி தோல்வி என்பது கிடையாது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அரசு ஊழியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 9 நாட்களாக நடைபெற்ற வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது.

Next Story