உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது நான் செல்லாத கிராமம் இல்லை முதல்-அமைச்சருக்கு, மு.க.ஸ்டாலின் பதில்


உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது நான் செல்லாத கிராமம் இல்லை முதல்-அமைச்சருக்கு, மு.க.ஸ்டாலின் பதில்
x
தினத்தந்தி 30 Jan 2019 11:30 PM GMT (Updated: 30 Jan 2019 7:46 PM GMT)

உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது தான் செல்லாத கிராமமே இல்லை என்று முதல்-அமைச்சருக்கு, மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

சேலம், 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், சேலம் மாவட்டத்தில் உள்ள பாகல்பட்டி ஊராட்சியில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பங்கேற்றார். அங்கு நடைபெற்ற தி.மு.க. ஊராட்சி சபை கூட்டத்திலும் அவர் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

கிராமங்கள் தான் அரசியலை நிர்ணயிக்கிறது. கிராமங்கள் தான் இந்தியாவின் முதுகெலும்பு. ஆனால் அந்த கிராமங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால், கிராம நிர்வாக பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடியவில்லை. இதனால் கிராமங்கள் வளர்ச்சி பெறாமல் நாடு குட்டிச்சுவராகி போயிருக்கிறது.

சமீபத்தில் நான், மம்தா பானர்ஜி ஏற்பாடு செய்திருந்த கொல்கத்தா மாநாட்டுக்கு சென்றிருந்தபோது, அங்கு வந்திருந்த தலைவர்கள் அனைவரும் என்னிடம் கேட்டது, ஊராட்சி சபை கூட்டத்தை உங்களால் எப்படி நடத்த முடிகிறது என்று தான். அவர்களிடத்தில் இந்தியாவிலேயே இப்படிப்பட்ட ஊராட்சி சபை கூட்டத்தை யாரும் நடத்தியது கிடையாது என்றேன். அந்த தகுதி நமக்கு இருக்கிறது.

ஆனால், மு.க.ஸ்டாலினுக்கு திடீரென கிராமங்களின் நினைவு வந்துவிட்டது, அவர் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்திருக்கிறார், துணை முதல்-அமைச்சராக இருந்திருக்கிறார். அப்போதெல்லாம் கிராமங்களுக்கு சென்றிருக்கிறாரா? என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்கிறார். உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது, நான் செல்லாத கிராமங்களே இல்லை. என்னை போல கிராமங்களுக்கு சென்ற ஒரு உள்ளாட்சித்துறை அமைச்சரும் இருந்திருக்க முடியாது.

இன்றைக்கு நான் தனியாக, யாருடைய பாதுகாப்பும் இல்லாமல் மக்களை பார்க்கச் செல்கிறேன். எடப்பாடி பழனிசாமியால் அப்படி மக்களை சந்திக்க முடியுமா? அப்படி சந்தித்தால் இவர் தான் முதல்-அமைச்சர் என்று ஏற்றுக்கொள்கிறேன்.

தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது முறையாக உள்ளாட்சி தேர்தலை நடத்தினோம். அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நமக்கு நாமே திட்டம், சிமெண்ட் சாலை வசதி, மயானத்தை சுத்தம் செய்தது என பணிகளை மேற்கொண்டோம். எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் எதுவும் நடைபெறவில்லை.

மகளிர் சுய உதவிக்குழுக்கள் இன்றைக்கு அனாதை போன்று ஆகிவிட்டது. இப்போது, தமிழ்நாட்டில் நடக்கக்கூடிய ஆட்சிக்கு ‘கரெப்சன், கமிஷன், கலெக்சன்’ தான் கொள்கை. எல்லாவற்றிலும் முதலிடம் என்று சொல்கின்றார்கள். எதில் முதலிடம் வருகிறார்களோ இல்லையோ, ஒரு கொலைகார ஆட்சி என்று சொல்வதில் இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலேயே முதலிடம் இந்த ஆட்சி தான்.

உள்ளாட்சித்துறை அமைச்சராக வேலுமணி இருக்கிறார். மிகவும் விவரமாக பேசக்கூடியவர், சட்டமன்றத்தில் அவர் என்ன பேசினாலும், யாருக்கும் புரியாது. அது பிரச்சினை இல்லை. புரிந்தால் தானே நாம் சண்டை போட முடியும். அப்படி ஒரு திறமைசாலி. உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது என திட்டவட்டமாக ஈடுபட்டிருக்க கூடியவர்.

பஞ்சாயத்தில் இருந்து மாநகராட்சி வரை எந்த வேலை கொடுத்தாலும் டெண்டர் விட வேண்டும். அவர் டெண்டரை கொடுப்பது அவருடைய உறவினர்களுக்கு. இப்படிப்பட்ட நிலையில் பல கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளனர். இதை விசாரிக்க வேண்டும் என்று தி.மு.க. சார்பில் ஆலந்தூர் பாரதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு போட்டுள்ளார். வழக்கை விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன்பிறகும் வேலுமணி பதவியில் இருக்கிறார். நியாயமாக தார்மீக பொறுப்பேற்று அவர் பதவி விலகியிருக்க வேண்டும்.

எனவே, இந்த ஆட்சியை அப்புறப்படுத்த, அதற்கு துணை நிற்கக்கூடிய பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியை விரட்ட நாடாளுமன்ற தேர்தல் வரப்போகிறது. அப்போது, நீங்கள் நல்ல முறையில் எங்களுக்கு வெற்றியை தேடித்தர வேண்டும். உங்கள் பிரச்சினைகளை எங்களிடத்தில் சொல்லி இருக்கிறீர்கள். அதையெல்லாம் மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் நானே சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்போகிறேன். அதை நிறைவேற்றாவிட்டால் ஆட்சிக்கு வந்த பிறகு இதற்கு நிரந்தர தீர்வை நான் காண்பேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story