மத்திய தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட இந்திய வன அலுவலர் பதவிக்கான நேர்முகத்தேர்வு முடிவு வெளியீடு


மத்திய தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட இந்திய வன அலுவலர் பதவிக்கான நேர்முகத்தேர்வு முடிவு வெளியீடு
x
தினத்தந்தி 6 Feb 2019 11:08 PM GMT (Updated: 6 Feb 2019 11:08 PM GMT)

மத்திய அரசு தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட இந்திய வன அலுவலர் பதவிக்கான தேர்வு முடிவு நேற்று வெளியானது. இதில் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 11 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சென்னை, 

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி. எஸ்.சி.) ஆண்டுதோறும் இந்திய வன அலுவலர் பதவிகளுக்கான தேர்வை நடத்தி வருகிறது. நிர்ணயிக்கப்பட்ட உடல் தகுதி மற்றும் தேவையான தகுதியுடையவர்கள் இந்த தேர்வில் கலந்துகொண்டு வருகின்றனர்.

முதல்நிலை, முதன்மை, நேர்முகத்தேர்வுகள் அடிப்படையில் வன அலுவலர் பதவிக்கான தேர்வு நடைபெறும். அதன்பின்னர், டெல்லியில் 25 கிலோ மீட்டர் தூரத்தை 4 மணி நேரத்துக்குள் நடந்து முடிக்க வேண்டும்.

அந்தவகையில் இந்திய வன அலுவலர் பணி குறித்த அறிவிப்பு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய அரசு தேர்வாணையம் வெளியிட்டது. 110 காலி பணியிடங்களுக்கு முதல்நிலை தேர்வு கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்தது. நாடு முழுவதும் சுமார் 4 லட்சம் பேர் எழுதினார்கள்.

அதற்கான தேர்வு முடிவு கடந்த ஆகஸ்டு மாதம் வெளியிடப்பட்டது. இதில் 1,200 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கான முதன்மை தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடைபெற்றது.

இதில் 223 பேர் தேர்ச்சி பெற்று, கடந்த மாதம் 28-ந் தேதி முதல் கடந்த 1-ந் தேதி வரை நடைபெற்ற நேர்முகத்தேர்வில் கலந்துகொண்டனர்.

இந்த நேர்முகத்தேர்வை வெற்றிகரமாக எதிர்கொள்வது எப்படி? என்பது குறித்து, மனிதநேய அறக்கட்டளையால் சென்னையில் நடத்தப்பட்டு வரும் சைதை துரைசாமியின் மனிதநேய கட்டணமில்லா ஐ.ஏ.எஸ். கல்வியகத்தால் சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி இயக்குனர் மா.கார்த்திகேயன் மேற்பார்வையில் தீவிர பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேர்முகத்தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. அதில் மனிதநேய கட்டணமில்லா கல்வியகத்தில் பயிற்சி பெற்ற 11 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேற்கண்ட தகவலை மனிதநேய அறக்கட்டளையின் நிறுவன தலைவர் சைதை துரைசாமி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Next Story