‘குடும்ப ஏழ்மையால் உதவி இயக்குனரை மணந்த சந்தியா’ : உறவினர்கள் வெளியிட்ட உருக்கமான தகவல்


‘குடும்ப ஏழ்மையால் உதவி இயக்குனரை மணந்த சந்தியா’ : உறவினர்கள் வெளியிட்ட உருக்கமான தகவல்
x
தினத்தந்தி 7 Feb 2019 12:06 AM GMT (Updated: 7 Feb 2019 12:06 AM GMT)

குடும்ப வறுமையால் உதவி இயக்குனரை சந்தியா திருமணம் செய்து கொண்டதாக உறவினர்கள் கூறியுள்ளனர்.

நாகர்கோவில், 

குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள ஞாலத்தில் வசிக்கும் சந்தியாவின் உறவினர்கள் ராதா, உஷா ஆகியோர் உருக்கமான தகவல்களை கூறினர். அதன் விவரம் வருமாறு:-

சந்தியாவுக்கு, உதயன் என்ற அண்ணனும், சஜிதா என்ற தங்கையும் உள்ளனர். அண்ணன் கேரளாவில் டைல்ஸ் ஒட்டும் வேலைக்கு சென்று வருகிறார். சஜிதா திருமணம் ஆகி தென்தாமரைகுளம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சந்தியாவின் பெற்றோர் ஞாலத்தில் ஒரு சிறிய வீட்டில் வசித்து வருகிறார்கள்.

சந்தியா சிறு வயதிலேயே அழகாக இருப்பார். அவருடைய பெற்றோர் ஊரில் சிறிய டீக்கடை நடத்தி வருகின்றனர். எனவே குடும்ப வறுமை காரணமாக 7-ம் வகுப்புடன் சந்தியா படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார்.

அதன்பிறகு சில காலம் வீட்டிலேயே சந்தியா இருந்தார். அப்போது பெண் தரகர் ஒருவர், சினிமாவில் உதவி இயக்குனராக ஒருவர் உள்ளார். அவரது சொந்த ஊர் தூத்துக்குடி, நல்ல வசதியான குடும்பம் என்று கூறி சந்தியாவை பெண் கேட்டு அவருடைய பெற்றோரை அணுகினார். முதலில் மறுப்பு தெரிவித்த சந்தியாவின் பெற்றோர், நாம்தான் கஷ்டப்படுகிறோம், நம்முடைய மகளாவது நன்றாக வாழட்டும் என நினைத்து திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தனர். சந்தியாவை விட பாலகிருஷ்ணனுக்கு சுமார் 15 வயது கூடுதல் இருக்கும்.

ஆனாலும் குடும்ப ஏழ்மை கருதி சந்தியா திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தார். ஆரம்பத்தில் அவர்களது வாழ்க்கை மகிழ்ச்சியாகத்தான் சென்றது. சந்தியா குழந்தைகளுடன் தூத்துக்குடி டூவிபுரத்தில் வசித்து வந்தார். சந்தியாவுக்கு மாயவரதன் என்ற மகனும், யோகமுத்ரா என்ற மகளும் உள்ளனர்.

பாலகிருஷ்ணன் மட்டும் சென்னையில் வசித்து வந்தார். அவர் அடிக்கடி தூத்துக்குடி வந்து மனைவி மற்றும் பிள்ளைகளை பார்த்து வந்தார். அவர் சென்னையில் இருந்ததாலும், சந்தியா அனைவரிடமும் சகஜமாக பேசக்கூடியவர் என்பதாலும் சந்தியா மீது அடிக்கடி பாலகிருஷ்ணன் சந்தேகப்பட்டதாக தெரிகிறது. இதனாலேயே இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. பொறுமையாக இருந்த சந்தியா ஒரு கட்டத்தில் கணவரை பிரிந்து வாழ முடிவு செய்தார். அதற்காக விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனு தாக்கலும் செய்துள்ளார்.

தற்போது நடந்ததை மறந்து விட்டு சேர்ந்து வாழலாம் என்று சந்தியாவை அழைத்துச் சென்ற பாலகிருஷ்ணன் இப்படி கொடூரமாக சந்தியாவை கொலை செய்து விட்டார். இப்போது 2 பிள்ளைகளும் அனாதையாகி விட்டனர் என்றனர்.

Next Story