இந்தியாவிலேயே முதன் முறையாக புற்றுநோய் தாக்கி கர்ப்பப்பை நீக்கப்பட்ட பெண்ணுக்கு கருமுட்டை உற்பத்தி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று சாதனை


இந்தியாவிலேயே முதன் முறையாக புற்றுநோய் தாக்கி கர்ப்பப்பை நீக்கப்பட்ட பெண்ணுக்கு கருமுட்டை உற்பத்தி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று சாதனை
x
தினத்தந்தி 19 Feb 2019 9:11 PM GMT (Updated: 19 Feb 2019 9:11 PM GMT)

புற்றுநோய் தாக்கி கர்ப்பப்பை நீக்கப்பட்ட பெண்ணிடம் இருந்து கருமுட்டையை உற்பத்தி செய்து வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று சென்னையில் சாதனை படைக்கப்பட்டு உள்ளது.

சென்னை, 

சென்னை, நுங்கம்பாக்கம் ஜி.ஜி.மருத்துவமனை உதவி இயக்குனர் டாக்டர் பிரியா செல்வராஜ், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கேரள மாநிலத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 27 வயது பெண்ணுக்கு கர்ப்பப்பை மற்றும் ஒரு இனப்பெருக்க மண்டலத்தை (கருவகம்) மருத்துவர்கள் நீக்கிவிட்டனர். ஆனால் குழந்தை பேறு வேண்டி அந்த பெண்ணின் மற்றொரு இனப்பெருக்க மண்டலத்தை அறுவை சிகிச்சை செய்து, வலதுபுற வயிற்று பகுதிக்கும் தோல் பகுதிக்கும் இடையே மருத்துவர்கள் பொருத்தியிருந்தனர். இந்தநிலையில் குழந்தை பேறு வேண்டி அந்த பெண் தொடர்ந்து எங்களிடம் சிகிச்சைக்காக வந்தார்.

அவருடைய இனப்பெருக்க மண்டலத்தை ஊக்குவிக்கும் ஊசி போட்டு கருமுட்டை வளர செய்யப்பட்டது. பின்னர் அக்கருமுட்டையை உறிஞ்சி எடுத்து, அவரது கணவரின் விந்தணுவுடன் இணைய செய்து, சோதனைக் குழாய் குழந்தை சிகிச்சை முறையில் வாடகை தாய் ஒருவரின் கர்ப்பப்பையில் செலுத்தப்பட்டது. இதன் மூலம் கடந்த 16-ந்தேதி 2.62 கிலோ எடையில் பெண் குழந்தை பிறந்தது. இது அவருக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இனப்பெருக்க மண்டல திசு ஆராய்ச்சி

இனப்பெருக்க மண்டலம் இடமாற்று அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு சிறிய துளை மூலம் (லேப்ராஸ்கோப்பி) வயிற்று புறத்தின் வழியாக மட்டுமே கருமுட்டையை உறிஞ்சி எடுத்து இருப்பதாக மருத்துவ இதழ்களில் ஆராய்ச்சி கட்டுரைகள் வெளிவந்துள்ளன. ஆனால் இந்த பெண்ணுக்கு கருமுட்டையை வலதுபுற வயிற்றுபகுதியின் தோல் வழியே ஒலியதிர்வு கருவி (ஸ்கேன்) உதவியுடன் கருமுட்டையை உறிஞ்சி எடுத்து இருப்பது இந்தியாவிலேயே முதன் முறையாக நிகழ்த்தி சாதனை படைக்கப்பட்டு உள்ளது.

இனப்பெருக்க மண்டலம் இடமாற்று அறுவை சிகிச்சை செய்ததன் மூலம் சொந்த மரபியல் குழந்தையை பெற்றெடுக்க முடியும். இந்த முறை புற்றுநோய் ஆரம்ப நிலை மற்றும் பாதித்தவர்களுக்கு ஒரு வரபிரசாதமாகவே இருக்கும். தொடர்ந்து இனப்பெருக்க மண்டல திசு பதப்படுத்துதல் முறையில் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

உடன் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் கமலா செல்வராஜ் இருந்தார்.

Next Story