விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட வலியுறுத்தி மதுரையில் போராட்டம்; போலீஸ் குவிப்பு


விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட வலியுறுத்தி மதுரையில் போராட்டம்; போலீஸ் குவிப்பு
x
தினத்தந்தி 20 Feb 2019 7:01 AM GMT (Updated: 20 Feb 2019 7:01 AM GMT)

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட வலியுறுத்தி, கடைகளை அடைத்து, கோரிப்பாளையத்தில் ஏராளமானோர் போராட்டம் நடத்தி வருவதால் பதற்றம் நிலவுகிறது.

மதுரை

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவரின் பெயரை சூட்ட வேண்டும், அவரது வரலாற்றை 7-ம் வகுப்பு பாட புத்தகத்தில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு தேவர் சமுதாய அமைப்புகள்  இன்று மதுரை மாநகரில் கடை அடைப்புக்கு தேவரின் தேசபக்தி பேரவை அழைப்பு விடுத்திருந்தது. 

இதைத் தொடர்ந்து இன்று கோரிப்பாளையத்தில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன. அங்கு அமைந்துள்ள தேவர் சிலை முன்பாக அனைவரும் கூடினர். இதைத் தொடர்ந்து போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. மேலும் கூட்டம் கூடாமல் இருக்க ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து தடுக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 

அண்ணா, பெரியார், மாட்டுத்தாவணி, பேருந்து நிலையங்களில் போராட்டத்தில் ஈடுபடச் சென்றோர் கைது செய்யப்பட்டனர். தல்லாகுளம் வள்ளுவர் காலனியில் அரசுப் பேருந்து மீது கல்வீசப்பட்டதில் கண்ணாடி நொறுங்கியது. வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை மறிக்க முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர்.

பதற்றம் நிலவுவதால் கோரிப்பாளையம், தல்லாகுளம், சிம்மக்கல், அண்ணா பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான உணவகங்கள், தேநீர் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. எம்.ஜி.ஆர் காய்கறி சந்தை மற்றும் பழக்கடை சந்தைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

Next Story