தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு தி.மு.க.கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு தி.மு.க.கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
x
தினத்தந்தி 21 Feb 2019 12:15 AM GMT (Updated: 20 Feb 2019 7:05 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய அறிவிப்பை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

சென்னை, 

நாடாளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெற இருப்பதால், கூட்டணி அமைப்பது, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு போன்றவற்றில் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் உள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் இடங்கள் குறித்து கடந்த 2 நாட்களாக டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை, தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவை ஏற்று கனிமொழி நடத்திய அந்த பேச்சுவார்த்தையில், காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகளும், புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியையும் ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து உடனடியாக டெல்லியில் இருந்து புறப்பட்ட கனிமொழி, பேச்சுவார்த்தை விவரங்களை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்தார்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளை இறுதி செய்ய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் முகுல்வாஸ்னிக், வேணுகோபால், சஞ்சய்தத் ஆகியோர் நேற்று மாலை 5.30 மணிக்கு டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தனர். பின்னர் அவர்கள் கிண்டியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலுக்கு சென்று ஓய்வு எடுத்தனர்.

அதன்பிறகு அவர்கள், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், சட்டசபை காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.ஆர்.ராமசாமி, விஜயதரணி எம்.எல்.ஏ. ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் அவர்கள் இரவு 8 மணிக்கு அண்ணா அறிவாலயத்துக்கு புறப்பட்டு சென்றனர்.

அங்கு அவர்களை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் ஆகியோர் வரவேற்றனர். அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் முகுல்வாஸ்னிக், வேணுகோபால், சஞ்சய்தத் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோருடன், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, பொன்முடி ஆகியோர் தொகுதி பங்கீடு குறித்து இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர்.

இரு கட்சிகளின் தலைவர்களும் சுமார் ½ மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த பேச்சுவார்த்தையின் போது காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதி என மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதற்கான ஒப்பந்தத்தில் மு.க.ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி ஆகியோர் கையெழுத்திட்டனர்.

பேச்சுவார்த்தைக்கு பின்னர் நிருபர்களிடம் பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருக்கும் தகவலை நிருபர்களிடம் தெரிவித்தார்.

அப்போது முகுல்வாஸ்னிக், வேணுகோபால், கே.எஸ்.அழகிரி ஆகியோர் உடன் இருந்தனர்.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் எவை? எவை? என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் தலைவர்களுடன் தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினர் பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்றனர்.

இந்த கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியை ஒதுக்கிவிட்டு, மீதம் உள்ள 25 தொகுதிகளில் போட்டியிட தி.மு.க. திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Next Story