அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைவதில் சிக்கல் இரட்டை இலக்க தொகுதிகளை கேட்பதால் இழுபறி


அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைவதில் சிக்கல் இரட்டை இலக்க தொகுதிகளை கேட்பதால் இழுபறி
x
தினத்தந்தி 20 Feb 2019 11:00 PM GMT (Updated: 20 Feb 2019 7:32 PM GMT)

அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இரட்டை இலக்க தொகுதிகளை தே.மு.தி.க. முன்வைப்பதால் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை, 

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கூட்டணி அமைப்பதிலும், தொகுதி பங்கீடுகளை முடிப்பதிலும் அ.தி.மு.க. தீவிரம் காட்டி வருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனித்து களம் கண்டு 37 தொகுதிகளில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. இந்த முறை மெகா கூட்டணியுடன், தேர்தலை சந்திக்க இருக்கிறது. அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்த பா.ம.க.வுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

அ.தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள இந்த கூட்டணியில் தே.மு.தி.க., த.மா.கா. ஆகிய கட்சிகளை இணைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை வந்த பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளரும், மத்திய மந்திரியுமான பியூஸ்கோயல், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை சாலிக்கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது அ.தி.மு.க. கூட்டணிக்கு வரும்படி அவர் அழைப்பு விடுத்தார்.

விஜயகாந்த் மனைவி பிரேமலதா விஜயகாந்த், துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோருடன் பியூஸ் கோயல் பேசினார். எல்.கே.சுதீஷிடம், பியூஸ்கோயல் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தியபோது, இரட்டை இலக்க தொகுதிகளை கேட்டு எல்கே.சுதீஷ் வலியுறுத்தியுள்ளார். இதனால் அந்த பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்படவில்லை.

இந்தநிலையில், தே.மு.தி.க. துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் தலைமையில் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று காலை அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் இருந்து கொண்டே எல்.கே.சுதீஷ், தொகுதி பங்கீடு தொடர்பாக மத்திய மந்திரி பியூஸ்கோயல், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் செல்போனில் பேசியுள்ளார். அப்போதும், தே.மு.தி.க.வுக்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

தே.மு.தி.க. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அணியில் இணைந்து போட்டியிட்டபோது, அந்த அணியில் அதிகபட்சமாக 14 தொகுதிகளை தே.மு.தி.க. பெற்று, போட்டியிட்டது. அந்த அணியில் பா.ம.க.வும் இருந்தது. இதை சுட்டிக்காட்டிய தே.மு.தி.க., கடந்த முறை போல் எங்களுக்கு இரட்டை இலக்கத்தை தந்தால்தான் கூட்டணி என்று கறாராக கூறியிருக்கிறது. ஆனால் அ.தி.மு.க. தரப்பில் 3 முதல் 4 தொகுதிகளுக்கு மேல் கொடுக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் அ.தி.மு.க.- தே.மு.தி.க. கூட்டணி ஏற்படுவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

அதேபோல், ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியுடனும் அ.தி.மு.க.வின் சார்பில் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அக்கட்சிக்கு ஒரு இடம் வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் த.மா.கா. தரப்பில் 2 தொகுதிகள் வலியுறுத்தப்பட்டதால் உடன்பாடு ஏற்படவில்லை.

வரும் 24-ந்தேதி ஜெயலலிதா பிறந்தநாள் அன்று அ.தி.மு.க. போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை, தொகுதிகள், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் எவை? எவை? என்பது குறித்து அதிகாரபூர்வமாக வெளியிட அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story