கிராமப்புறங்களில் விவசாய நிலங்களில் உள்ள மதுபானக்கடைகள் எத்தனை? தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு


கிராமப்புறங்களில் விவசாய நிலங்களில் உள்ள மதுபானக்கடைகள் எத்தனை? தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 20 Feb 2019 8:16 PM GMT (Updated: 20 Feb 2019 8:16 PM GMT)

ஈரோடு மாவட்டம் மயிலம்பாடி என்ற கிராமத்தில் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘டாஸ்மாக்’ மதுபானக்கடையை அகற்றக்கோரி நல்லசாமி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

சென்னை, 

ஈரோடு மாவட்டம் மயிலம்பாடி என்ற கிராமத்தில் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘டாஸ்மாக்’ மதுபானக்கடையை அகற்றக்கோரி நல்லசாமி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் செயல்பட்டு வரும் ‘டாஸ்மாக்’ மதுபானக்கடைகள் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய அரசுக்கு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று அந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘டாஸ்மாக்’ நிர்வாக இயக்குனர் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், ‘தமிழகம் முழுவதும் 5,198 மதுபானக் கடைகள் உள்ளன. இதில் கிராமப்புறங்களில் 2,728 கடைகள் உள்ளன’ என்று கூறப்பட்டிருந்தது.

விசாரணையின்போது தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், ‘விவசாய நிலங்களில் டாஸ்மாக் மதுபானக்கடைகள் அமைக்க விதிகளில் தடையேதும் இல்லை’ என்றார். அதற்கு நீதிபதிகள், ‘விதிகள் தடுக்கவில்லை என்றால் கோர்ட்டு, மருத்துவமனை அருகிலும் மதுபானக்கடைகளை தடையின்றி திறக்கலாமா?’ என கேள்வி எழுப்பினர்.

பின்னர், கிராமப்புறங்களில் தற்போது உள்ள 2,728 மதுபானக்கடைகளில் எத்தனை கடைகள் விவசாய நிலங்களில் உள்ளது? மற்ற கடைகள் எந்த வகையான நிலங்களில் உள்ளது? என்பதை புகைப்பட ஆதாரங்களுடன் அடுத்த மாதம் (மார்ச்) 11-ந் தேதிக்குள் தமிழக அரசு அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Next Story