பெண் போலீஸ் அதிகாரி பணியிட மாறுதலில் தலையிட ஐகோர்ட்டு மறுப்பு ‘காவல்துறையின் நிர்வாக நடவடிக்கையை சீர்குலைத்துவிடும்’ என கருத்து


பெண் போலீஸ் அதிகாரி பணியிட மாறுதலில் தலையிட ஐகோர்ட்டு மறுப்பு ‘காவல்துறையின் நிர்வாக நடவடிக்கையை சீர்குலைத்துவிடும்’ என கருத்து
x
தினத்தந்தி 20 Feb 2019 10:15 PM GMT (Updated: 20 Feb 2019 8:44 PM GMT)

பெண் போலீஸ் அதிகாரியின் பணியிட மாறுதலில் ஐகோர்ட்டு தலையிட மறுத்துவிட்டது.

சென்னை, 

பெண் போலீஸ் அதிகாரியின் பணியிட மாறுதலில் ஐகோர்ட்டு தலையிட மறுத்துவிட்டது. அப்படி தலையிட்டால் அது காவல்துறையின் நிர்வாக நடவடிக்கையை சீர்குலைத்துவிடும் என கூறி உள்ளது.

சென்னை கோட்டூர்புரம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்தவர் ஆர்.அனிதா. பெண் போலீஸ் அதிகாரியான இவரை எண்ணூர் போலீஸ் நிலையத்துக்கு இடமாறுதல் செய்து, இணை போலீஸ் கமிஷனர் கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் 5-ந் தேதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் சப்-இன்ஸ்பெக்டர் ஆர்.அனிதா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார். இணை போலீஸ் கமிஷனர் சார்பில் சிறப்பு அரசு பிளடர் ஏ.என்.தம்பித்துரை ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

மனுதாரர் 2012-ம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். பின்னர், 2013-14-ம் ஆண்டுகளில் ஐஸ்ஹவுஸ் போலீஸ் நிலையத்திலும், 2014-ம் ஆண்டு மயிலாப்பூர் போலீஸ் நிலையத்திலும், 2014-17-ம் ஆண்டுகளில் மெரினா கடற்கரை போலீஸ் நிலையத்திலும், அதன்பின்னர் ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையம், கோட்டூர்புரம் போலீஸ் நிலையத்திலும் பணியாற்றியுள்ளார். தற்போது எண்ணூர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் எந்த ஒரு இடத்துக்கு பணியிட மாறுதல் செய்தாலும், அங்கு பணி செய்ய செல்லவேண்டும் என்ற பணி நிபந்தனையை ஏற்றுக்கொண்டுதான் பணியில் சேருகின்றனர். பணியிட மாறுதல் என்பது பணியில் ஒரு நிபந்தனைதான்.

எந்த இடத்துக்கு மாறுதல் செய்தாலும், நிர்வாக பொதுநலன் கருதி அங்கு சென்று அரசு ஊழியர்கள் பணியாற்றவேண்டும். சமுதாயத்தில் மிகப்பெரிய அந்தஸ்தை அரசு ஊழியர்கள் பெற்றுள்ளதால், அவர்கள் பணியில் அர்ப்பணிப்புடனும், கண்ணியம், நேர்மை ஆகியவற்றுடனும் செயல்படவேண்டும்.

மனுதாரர் கடந்த 2012-ம் ஆண்டு முதல் சென்னை மாநகரில் மட்டுமே பணியாற்றியுள்ளது மிகப்பெரிய ஆச்சரியத்தை அளிக்கிறது. எந்த ஒரு காரணத்தையும் கூறாமல், சப்-இன்ஸ்பெக்டரை பல ஆண்டுகளாக சென்னையில் பணியாற்ற உயர் அதிகாரிகள் எப்படி அனுமதித்தனர்? என்பது புரியவில்லை.

ஒரே பகுதியில் அரசு ஊழியர்களை, குறிப்பாக போலீஸ் அதிகாரிகளை பணியாற்ற அனுமதித்தால், அவர்கள் அப்பகுதியில் பிரபலமாகி விடுவார்கள். அதனால், தேவையில்லாத பல பிரச்சினைகள் ஏற்படும்.

அதேநேரம், தண்டனை கொடுக்கும் விதமாகவும், தனிப்பட்ட பகையினாலும் ஒருவரை பணியிட மாறுதல் செய்யக்கூடாது என்பதில் சந்தேகமும் இல்லை, மாற்றுக் கருத்தும் இல்லை. நிர்வாக காரணத்துக்காக மட்டுமே பணியிட மாறுதல் செய்யவேண்டும். இதற்கு எதிராக பணியிட மாறுதல் செய்யும்போது, அதை ஊழியர் எதிர்க்கலாம்.

அதிகாரம் இல்லாத அதிகாரி, உள்நோக்கத்துடன் ஒரு ஊழியரை பணியிட மாறுதல் செய்யும்போது, அந்த அதிகாரிக்கு எதிராக வழக்கு தொடரலாம். நிர்வாக ரீதியான பணியிட மாறுதலில் ஐகோர்ட்டு தலையிட முடியாது. பணியிட மாறுதல் என்பது தண்டனை அல்ல. காவல்துறையில் நடைபெறும் பணியிட மாறுதலில் இந்த ஐகோர்ட்டு தலையிடும்போது, அந்த துறையின் ஒட்டுமொத்த நிர்வாக ரீதியான நடவடிக்கையை சீர்குலைத்து விடும்.

இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரர் கடந்த 2012-ம் ஆண்டு முதல் சென்னை மாநகரில் மட்டுமே பணியாற்றியுள்ளார். தற்போது கோட்டூர்புரத்தில் இருந்து எண்ணூர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவை ஏற்க எந்த ஒரு காரணமும் இல்லை.

நிர்வாக ரீதியான பணியிட மாறுதல் உத்தரவில் தலையிட முடியாது. தனிப்பட்ட முறையில் வேறு ஏதாவது கோரிக்கை மனுதாரரிடம் இருந்தால், அதை உயர் அதிகாரிகளிடம் முறையிட அவருக்கு உரிமை உள்ளது. இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

Next Story