நாடாளுமன்ற தேர்தல்களில் 4 முறை கூட்டணி அமைத்து களம் கண்ட தி.மு.க-காங்கிரஸ்


நாடாளுமன்ற தேர்தல்களில் 4 முறை கூட்டணி அமைத்து களம் கண்ட தி.மு.க-காங்கிரஸ்
x
தினத்தந்தி 21 Feb 2019 10:45 PM GMT (Updated: 21 Feb 2019 7:45 PM GMT)

நாடாளுமன்ற தேர்தல்களில் தி.மு.க-காங்கிரஸ் 4 முறை கூட்டணி அமைத்து போட்டியிட்டுள்ளது.

சென்னை, 

அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றின் கொள்கை, கோட்பாடுகள் வெவ்வேறாக இருந்தாலும், தேர்தல் என்று வந்துவிட்டால் அவைகளை மூட்டைகட்டி வைத்துவிட்டு, எதிரும் புதிருமான கட்சிகள் கூட கூட்டணி அமைத்து போட்டியிடுவதை தேர்தல் களத்தில் நீண்ட நெடுங்காலமாக கண்டுவருகிறோம்.

நாடு சுதந்திரம் அடைந்ததற்கு பிறகு 1952-ம் ஆண்டு முதல் நடைபெற்றுவரும் நாடாளுமன்ற தேர்தல்களில் பல்வேறு கூட்டணிகளை நாட்டு மக்கள் பார்த்து வருகிறார்கள். தமிழகத்தில் தி.மு.க-காங்கிரஸ் கட்சிகள் 1971, 1980, 2004, 2009 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களில் கூட்டணி அமைத்து போட்டியிட்டுள்ளன.

அதில், 1971-ம் ஆண்டு இந்த கூட்டணி மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 38 இடங்களை கைப்பற்றி இருக்கிறது. 1980-ம் ஆண்டு 37 இடங்களையும், 2004-ம் ஆண்டு 39 இடங்களையும், 2009-ம் ஆண்டு 27 இடங்களையும் கைப்பற்றி ராசியான கூட்டணி என்பதை நிரூபித்து இருக்கிறது. அதே கூட்டணி 5-வது முறையாக வரும் தேர்தலிலும் தொடருகிறது.

அதேசமயம் காங்கிரஸ் கட்சி அ.தி.மு.க.வுடன் 1977, 1984, 1989, 1991, 1996, 1999-ம் ஆண்டுகளில் கூட்டணி அமைத்து போட்டியிட்டுள்ளது. அதில், 1977-ம் ஆண்டு 34 இடங்களையும், 1984-ம் ஆண்டு 37 இடங்களையும், 1989-ல் 38 இடங்களையும், 1991-ல் 39 இடங்களையும், 1999-ல் 13 இடங்களையும் இந்த கூட்டணி கைப்பற்றியது. ஆனால், 1996-ல் ஒரு இடத்தில் கூட இந்த கூட்டணி வெற்றி பெறவில்லை.

இதேபோல் 1999-ம் ஆண்டு தி.மு.க.வும் பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை எதிர்கொண்டது. இந்த கூட்டணி 26 இடங்களில் வெற்றிவாகை சூடியது.

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க-பா.ஜ.க., தி.மு.க.-காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளன. இந்த முறை எந்த அணிக்கு வெற்றிவாய்ப்பு கிடைக்கும் என்பதை அறிய தமிழக மக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

Next Story