நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி: மக்கள் நலனில் அக்கறை உள்ள கட்சிகளுடன் பேச்சுவார்த்தை கமல்ஹாசன் பேட்டி


நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி: மக்கள் நலனில் அக்கறை உள்ள கட்சிகளுடன் பேச்சுவார்த்தை கமல்ஹாசன் பேட்டி
x
தினத்தந்தி 21 Feb 2019 9:30 PM GMT (Updated: 21 Feb 2019 8:07 PM GMT)

மக்கள் நலனில் அக்கறை உள்ள கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று கமல்ஹாசன் கூறினார்.

சென்னை, 

நடிகர் கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2-ம் ஆண்டு தொடக்க விழா ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. அங்கு கட்சி கொடியை கமல்ஹாசன் ஏற்றிவைத்தார். அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் கமல்ஹாசன் பேசியதாவது:-

இப்போது இங்கே கொடியேற்றி இருக்கிறோம். அடுத்து எங்கே ஏற்றிவைக்க வேண்டும் என்ற இலக்கு உங்களுக்கு தெரியும். அதை நோக்கி நகர்வோம். தனியாக நிற்போம் என்று சொன்னது நான் அல்ல, நாம். நாம் என்று சொல்லும்போதே தனிமை நீங்கிவிட்டது என்று தான் அர்த்தம். அந்த தைரியத்தில் தான் கூறுகிறேன்.

நமக்கு மக்கள் பலம் இருக்கிறது. நேற்று வரை நான் சொல்வது புரியவில்லை என்று கூறிக்கொண்டு இருந்தார்கள். இன்றைக்கு அவர்களுக்கு புரியத்தொடங்கி இருப்பதற்கு காரணம், நான் என்னுடைய சுருதியை அதிகப்படுத்தி இருக்கிறேன். பலம் என்ன என்பதை நிரூபிப்பதற்கான அரிய வாய்ப்பு ஒன்று உங்கள் முன்னால் இருக்கிறது. அதில் சிறிய கருவியாக நான் உங்கள் முன்னால் நிற்கிறேன். இந்த கருவியை பயன்படுத்திக் கொள்ளுங்கள். தமிழகம் மேம்படட்டும்.

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

பின்னர் கமல்ஹாசன் நிருபர்களிடம் கூறும்போது, “தேர்தலுக்கான வியூகத்தை இப்போது நாங்கள் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. மெகா கூட்டணி என்று தங்களை தாங்களே கட்சிகள் சொல்லக்கூடாது. மக்கள் தான் சொல்ல வேண்டும். கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டு, மற்ற கட்சிகள் கூட்டணி வைத்துக்கொள்கின்றனர். 40 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடுகிறது. வேட்பாளர் பட்டியல் 24-ந் தேதி முதல் வெளியிடப்படும்” என்றார்.

அதனைத்தொடர்ந்து சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்ற அவர் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி ஓராண்டு நிறைவுபெற்ற நிலையில், கடந்த ஒரு வருடமாக ஏராளமான மக்கள் நல பணிகளை, கட்சி வளர்ச்சி பணிகளை செய்துள்ளோம். கிராமங்களை தத்தெடுத்து உதவிகள் செய்து இருக்கிறோம். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிராம சபை கூட்டம் நடத்தி உதவினோம்.

சிலர் கட்டுக்கட்டாக கொள்கை புத்தகங்களை வெளியிட்டு, கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டு அதன் மீதேறி மிதித்து நின்று கூட்டணி பேசுகிறார்கள். மக்கள் நலனில் அக்கறை உள்ள கட்சிகளுடன் கூட்டணி ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. அவர்கள் சத்தியம் செய்துகொடுத்தால் பேச்சுவார்த்தை நடத்துவோம். 3-வது அணி அமையவும் வாய்ப்பு உள்ளது. தேர்தலில் நான் போட்டியிடுவேனா என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story