தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ரூ.332½ கோடியில் அமைக்கப்பட்ட சாலைகள்-பாலங்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்


தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ரூ.332½ கோடியில் அமைக்கப்பட்ட சாலைகள்-பாலங்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்
x
தினத்தந்தி 22 Feb 2019 10:15 PM GMT (Updated: 22 Feb 2019 8:23 PM GMT)

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ரூ.332½ கோடியில் அமைக்கப்பட்ட சாலைகள்-பாலங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் நேற்று திறந்துவைத்தார்.

சென்னை, 

தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மாநிலத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் சாலை உள்கட்டமைப்பு வசதிகளின் முக்கியத்துவத்தினை உணர்ந்து, பெருகிவரும் போக்குவரத்து தேவைக்கேற்ப சாலைகளின் கொள்ளளவை அதிகரிக்கவும், பாதுகாப்பான பயணத்தினை உறுதி செய்யவும், மாநிலம் முழுவதும் புதிய பாலங்களை கட்டுதல், தேவையான பகுதிகளில் தரமான சாலைகள் அமைத்தல், சாலைகள் மற்றும் பாலங்களை பராமரித்தல் போன்ற பணிகளை மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு முனைப்புடன் செய்து வருகிறது.

அந்த வகையில் திருநெல்வேலி, ராஜபாளையம் மற்றும் சங்கரன்கோவில் நகரங்களில் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்கும் வகையில் ரூ.286 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட 75.288 கிலோ மீட்டர் நீள ராஜபாளையம், சங்கரன்கோவில் மற்றும் திருநெல்வேலி சாலைப் பகுதிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் இன்று (நேற்று) திறந்துவைத்தார்.

திருவாரூர் மாவட்டம், வையகளத்தூரில் உள்ள நீடாமங்கலம்-கொரடாச்சேரி ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயில்வே கடவுக்கு மாற்றாக ரூ.27 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சாலை மேம்பாலம், விருதுநகர் மாவட்டம், சித்துராஜபுரம்-விளாம்பட்டி சாலையில் போட்ரெட்டியாபட்டியில் காட்டு ஓடையின் குறுக்கே ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், ஆமத்தூர்-லெட்சுமியாபுரம் சாலையில் ரெங்கபாளையத்தில் காட்டு ஓடையின் குறுக்கே ரூ.1 கோடியே 58 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், கடலூர் மாவட்டம், நல்லூர்-இலங்கியனூர் சாலையில் மணிமுத்தாறு ஆற்றின் குறுக்கே ரூ.12 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், திருவள்ளூர் மாவட்டம், பொத்தூரில், பம்மதுகுளம் உபரி நீர் கால்வாயின் குறுக்கே ரூ.3 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம் என மொத்தம் ரூ.332 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்துவைத்தார்.

திருப்பூர் மாநகரத்தில் ரூ.4 கோடியே 19 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 34 காவலர் குடியிருப்புகள் மற்றும் திருப்பூர் மாவட்டம் மங்கலத்தில் ரூ.69 லட்சத்து 18 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவல் நிலையக் கட்டிடம், திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூரில் ரூ.3 கோடியே 54 லட்சத்து 4 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 24 காவலர் குடியிருப்புகள், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், சென்னை மாநகர் திருநின்றவூர் மற்றும் பல்லாவரம், மதுரை மாநகர் ஜெய்ஹிந்த்புரம், விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி (போக்குவரத்து காவல் நிலையம்) ஆகிய இடங்களில் மொத்தம் ரூ.5 கோடியே 4 லட்சத்து 76 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 காவல் நிலையக் கட்டிடங்கள், மதுரை மாநகரில் ரூ.1 கோடியே 63 லட்சத்து 81 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மதுரை சரக குற்றப் பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை அலுவலகக் கட்டிடம், வேலூர் மாவட்டம் ஆம்பூரில் ரூ.96 லட்சத்து 4 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையம் என மொத்தம் ரூ.16 கோடியே 6 லட்சத்து 83 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவல்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை கட்டிடங்களையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

‘உங்கள் சொந்த இல்லம்’ திட்டத்தின் கீழ் சீருடை பணியாளர்களுக்காக சிவகங்கை வட்டம், பையூர்பிள்ளைவயல் கிராமத்தில் ரூ.44 கோடியே 76 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள 201 வீடுகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.

தமிழ்நாடு காவல்துறையின் தொழில்நுட்ப சேவைகள் பிரிவில் காலியாக உள்ள உதவி ஆய்வாளர் (தொழில்நுட்பம்) பணியிடங்களை நிரப்பிட தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டு, சுமார் 29 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

அவ்விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, எழுத்து தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு உதவி ஆய்வாளர் (தொழில்நுட்பம்) பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 234 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 7 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story