‘ஆசைகாட்டியும், அச்சுறுத்தியும் கூட்டணி அமைக்கிறார்கள்’ மு.க.ஸ்டாலின் பேச்சு


‘ஆசைகாட்டியும், அச்சுறுத்தியும் கூட்டணி அமைக்கிறார்கள்’ மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 22 Feb 2019 9:15 PM GMT (Updated: 22 Feb 2019 8:25 PM GMT)

‘ஆசைகாட்டியும், அச்சுறுத்தியும் கூட்டணி அமைக்கிறார்கள்’ என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுதர்சனம் எம்.எல்.ஏ. இல்ல திருமண விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நாட்டிலே சில கூட்டணி கட்சிகளை பார்க்கின்றபோது, எப்படிப்பட்ட ஆசைகளுக்கு, எப்படிப்பட்ட அச்சுறுத்தலுக்கு, எப்படிப்பட்ட நிலைமைகளுக்கு எல்லாம் ஆளாகியிருக்கிறார்கள் என்பதையெல்லாம் நீங்கள் சிந்தித்துப்பார்க்க வேண்டும். ஆனால், என்னை பொறுத்தவரையில் எனக்கு ஒரு மகிழ்ச்சி.

ஏனென்றால் ஒரு கட்சியினுடைய நிறுவன தலைவர் தொடர்ந்து பல ஆண்டுகாலமாக கொள்கைரீதியாக சொல்லிவந்தது, ‘திராவிட இயக்கத்தோடு என்றைக்கும் நாங்கள் கூட்டு வைக்கமாட்டோம்’ என்று கூறிவந்தார். நல்லவேளை நம்மிடத்தில் அவர்கள் கூட்டுவைக்கவில்லை. அ.தி.மு.க.வோடு அவர்கள் கூட்டணி வைத்திருக்கிற காரணத்தால் அ.தி.மு.க. இன்றைக்கு திராவிட இயக்கம் இல்லை என்பதை வெளிப்படையாக சொல்லி இருக்கிறார்கள்.

2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றபோது அந்த கட்சி கொள்கைரீதியாக மூன்று முழக்கத்தை தெரிவித்தார்கள். அதாவது, வெளிநாட்டில் ஒரு தலைவர் வெளியிட்ட விளம்பரத்தை காப்பியடித்து ‘மாற்றம்-முன்னேற்றம்-அன்புமணி’ என்று வாசகம் போட்டார்கள். இப்போது, இந்த தேர்தலில் அதை மாற்றம்-ஏமாற்றம் என்று மாற்றிப்போட வேண்டிய ஒரு நிலை வந்திருக்கிறது.

தமிழ்நாட்டை ஆண்ட மன்னர்கள் கடல் தாண்டி புகழ் கொடி நாட்டியது உண்டு. ஆனால், இப்போதைய அ.தி.மு.க. ஆட்சி கடல் தாண்டி ஊழல் கொடி நாட்டியிருக்கிறது. ‘காக்னிசண்ட்’ என்கிற அமெரிக்க நிறுவனம் சிறுசேரி பகுதியில் ஒரு கட்டிடம் கட்ட 8 லட்சத்து 40 ஆயிரம் டாலர்கள் லஞ்சமாக வழங்கியிருக்கிறது. இது இந்திய மதிப்பில் 26 கோடி ரூபாய்.

இதுகுறித்து தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஒரு புகார் மனு வழங்கி இருக்கிறார். ஒரு வாரத்திற்குள்ளாக முழுமையான விசாரணை நடைபெறவில்லை என்றால், இதை கோர்ட்டு வரை சென்று குற்றவாளிகளை நாட்டிற்கு அடையாளம் காட்டுகிற முயற்சியை தி.மு.க. எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story