முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நளினி கடிதம்


முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நளினி கடிதம்
x
தினத்தந்தி 23 Feb 2019 2:51 PM GMT (Updated: 23 Feb 2019 2:51 PM GMT)

விடுதலை தொடர்பான உத்தரவை ஒவ்வொரு நாளும் எதிர்நோக்கி காத்திருக்கும்போது ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதி உள்ள கடிதத்தில் நளினி குறிப்பிட்டுள்ளார்.

சென்னை,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு சட்டப்பேரவையில் 2014-ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தற்போது நிலுவையில் உள்ளது. 

இந்நிலையில், முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி நளினி 2015ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளி நளினியை விடுவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துவிட்டது. நளினி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் உயர்நீதிமன்றம் இதே கோரிக்கையில் தலையிட முடியாது எனவும் கூறிவிட்டது.

இதனையடுத்து, 7 பேர் விடுதலை  தொடர்பாக தமிழக அரசு கோரிக்கை வைக்கும் பட்சத்தில், அதனை ஆலோசனை செய்து ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்து இருந்தது. ஆனால், தமிழக அரசு மனு அளித்தும் ஆளுநர் தரப்பில் இன்னும் எவ்வித முடிவும் எடுக்கப்படாமல் உள்ளது.

இந்தநிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நளினி எழுதி உள்ள கடிதத்தில்,

இந்தியாவிலேயே மிக அதிக ஆண்டுகள் சிறையில் இருக்கும் பெண் கைதியான என்னை விடுதலை செய்யுங்கள். 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அமைச்சரவையின் முடிவு, ஆளுநர் மாளிகையில் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. 

நாங்கள் 7 பேரும் 27 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்துவிட்டோம். விடுதலை தொடர்பான உத்தரவை ஒவ்வொரு நாளும் எதிர்நோக்கி காத்திருக்கும்போது ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

Next Story