அரசு வேலைக்காக பணம் கொடுப்பவர்கள் மீது நடவடிக்கை டி.ஜி.பி.க்கு ஐகோர்ட்டு உத்தரவு


அரசு வேலைக்காக பணம் கொடுப்பவர்கள் மீது நடவடிக்கை டி.ஜி.பி.க்கு ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 23 Feb 2019 10:31 PM GMT (Updated: 23 Feb 2019 10:31 PM GMT)

அரசு வேலை பெறுவதற்கு பணம் கொடுப்பவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது அறிவிப்பு வெளியிடுமாறு தமிழக டி.ஜி.பி.க்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.20 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அட்ரின் போஸ்கோ என்பவர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர், ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மனுதாரர் கீழ்கோர்ட்டில் ரூ.10 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும், கோர்ட்டு மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை காலை, மாலை என இரு வேளைகளில் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

துரதிருஷ்டவசமானது

அந்த உத்தரவில் நீதிபதி மேலும் கூறியிருப்பதாவது:-

அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாகவும், மருத்துவக்கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். சீட் வாங்கி தருவதாகவும் கூறி பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்து விட்டதாக கூறி கோர்ட்டில் தினசரி பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன.

அரசு வேலை, மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். சீட் என்பது தகுதி அடிப்படையில் பெறப்பட வேண்டியது என்றும், பணம் கொடுத்து வாங்க வேண்டிய ஒன்றல்ல என்பதையும் பணம் கொடுப்பவர்கள் புரிந்து கொள்ளாதது துரதிருஷ்டவசமானது.

குறுக்கு வழியில் அரசு வேலையை பெறுவதற்காக பணம் கொடுப்பவர்களையும், பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றுபவர்களை போன்று தான் குற்றம் சாட்ட வேண்டும்.

குற்ற நடவடிக்கை

அரசு வேலையை பணம் கொடுத்து மறைமுகமாக பெற்றுவிடலாம் என்ற மனப்பாங்கை தடுத்து நிறுத்த வேண்டும். பொதுமக்களிடம் ஏற்படுத்தும் விழிப்புணர்வு மூலம் மட்டுமே இதை செய்ய முடியும். இதுபோன்ற விழிப்புணர்வு நாட்டின் அனைத்து பகுதி மக்களையும் சென்றடைய வேண்டும்.

எனவே, அரசு வேலைக்காகவும், மருத்துவ சேர்க்கைக்காகவும் யாரும் பணம் கொடுக்கும் செயலில் ஈடுபடக்கூடாது என்றும், இதற்காக பணம் கொடுப்பவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டி.ஜி.பி. பொது அறிவிப்பு வெளியிட வேண்டும்.

அந்தந்த மண்டல ஐ.ஜி. மூலம் இந்த விழிப்புணர்வை மேற்கொண்டு பொதுமக்கள் அரசு வேலைக்காக பணம் கொடுப்பதை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story