தமிழக இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் மத்திய மந்திரி பியூஸ் கோயல் தகவல்


தமிழக இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் மத்திய மந்திரி பியூஸ் கோயல் தகவல்
x
தினத்தந்தி 24 Feb 2019 9:23 PM GMT (Updated: 24 Feb 2019 9:23 PM GMT)

என்.எல்.சி. நிர்வாகம் ரூ.23 ஆயிரம் கோடி முதலீடு செய்வதால் தமிழக இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என மத்திய மந்திரி பியூஸ் கோயல் தெரிவித்தார்.

சென்னை,

தமிழகத்தில் 200 ரெயில் நிலையங்களில் நவீன கழிப்பறைகள் கட்டுவதற்கான திட்டத்துக்கு அடிக்கல் நாட்டும் விழா சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. மத்திய ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் தலைமை தாங்கினார். தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.கே.குல்ஷ் ரஸ்தா வரவேற்றார்.

அ.தி.மு.க. எம்.பி.க்கள் கே.என்.ராமசந்திரன், மைத்ரேயன், நவநீதகிருஷ்ணன், ஜெயவர்த்தன், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எஸ்.ஆர்.ராஜா, கே.எஸ்.ரவிசந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் மத்திய மந்திரி பியூஸ் கோயல் கழிப்பறைகள் கட்டுவதற்கான திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் தாம்பரம்-செங்கல்பட்டு பிரிவில் 2 சுரங்கப்பாதை, கிண்டி ரெயில் நிலையத்தில் 2-வது நுழைவு வாயில், எழும்பூர் ரெயில் நிலையத்தில் புதுப்பிக்கப்பட்ட டிக்கெட் முன்பதிவு மையம் உள்ளிட்டவைகளை நாட்டுக்காக அர்ப்பணித்து பேசியதாவது:-

பயங்கரவாத தாக்குதலில் பலியான 2 தமிழக வீரர்களுக்கு வணக்கத்தை சமர்ப்பிக்கிறேன். ஜெயலலிதாவின் பிறந்தநாளில், அவரை நான் முதல் முறையாக சந்தித்ததை நினைவு கூர்கிறேன். அந்த சந்திப்புக்கு பிறகு அவருடைய ரசிகர் ஆனேன். அவர் பிறந்த நாளில் விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைப்பதில் பெருமை அடைகிறோம்.

அனைத்து ரெயில் நிலையங்களிலும் கழிப்பறைகளை தூய்மையாக வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கழிப்பறைகள் தூய்மையாக இல்லாவிட்டால் அதிகாரிகளை உடனே தொடர்பு கொள்ளலாம். என்.எல்.சி. நிர்வாகம் தமிழகத்தில் பல்வேறு ரெயில் நிலைய வளாகங்களில் 200 கழிப்பறைகள் கட்டுவதற்கான திட்டத்தை தொடங்கியுள்ளது. இதற்காக என்.எல்.சி. நிர்வாகம் சார்பில் ரூ.52 கோடி ஒதுக்கி உள்ளது. இந்த கழிப்பறைகள் ரெயில் நிலையத்துக்கு வெளியே அமைக்கப்படும்.

இந்தியாவில் உள்ள அனைத்து ஆளில்லா ரெயில்வே வழித்தடங்கள் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்திய ரெயில்வே வரலாற்றில் 2017-18 ஆண்டு குறைந்த அளவே உயிரிழப்புகள் ஏற்பட்டு, பாதுகாப்பான ஆண்டாக அமைந்துள்ளது.

‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் சென்னையில் உள்ள ஐ.சி.எப். என்ஜினீயர்களால் வடிவமைக்கப்பட்டு, இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் முழுவதும் இந்திய தொழிற்நுட்பத்தால் ஆனது. இதை வடிவமைத்த என்ஜினீயர்களுக்கு பாராட்டுகள். ஐ.சி.எப். மேலும் 30 ரெயில்களை தயாரிக்க உள்ளது.

என்.எல்.சி. நிர்வாகம் கடந்த 4 ஆண்டுகளில் 80 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது. இதனால் மின்சாரத்தின் விலையை 93 காசுகள் குறைத்துள்ளது. மேலும் உற்பத்தியை 4 ஆயிரத்து 768 மெகாவாட் வரை அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் ரூ.23 ஆயிரம் கோடி மதிப்பில் என்.எல்.சி. நிர்வாகம் புதிய திட்டங்களை தொடங்க உள்ளது. இதன் மூலம் தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கிடைக்கும்.

பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. அரசுகள் தமிழகத்தின் முன்னேற்றத்துக்காக ரெயிலின் இரட்டை என்ஜின் போன்று செயல்படுகிறது. இதன்மூலம் தமிழகம் மேலும் முன்னேற்றம் மற்றும் வளமை அடையும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னை துறைமுக பொறுப்பு கழக உறுப்பினர் ஆர்.பிரகாஷ், தெற்கு ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் பி.கே.மிஸ்ரா, சென்னை ரெயில்வே கோட்ட மேலாளர் நவீன் குலாட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story