எத்தனை மத அமைப்புகளை அழைத்து வந்தாலும் திராவிட இயக்கத்தை வீழ்த்த முடியாது மு.க.ஸ்டாலின் பேச்சு


எத்தனை மத அமைப்புகளை அழைத்து வந்தாலும் திராவிட இயக்கத்தை வீழ்த்த முடியாது மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 24 Feb 2019 11:45 PM GMT (Updated: 24 Feb 2019 11:16 PM GMT)

எத்தனை மத அமைப்புகளை அழைத்து வந்தாலும் திராவிட இயக்கத்தை வீழ்த்த முடியாது என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

தஞ்சாவூர்,

திராவிடர் கழகத்தின் சார்பில் தஞ்சையில் 2 நாட்கள் மாநாடு நடைபெற்றது. முதல் நாள் திராவிடர் கழக மாநில மாநாடும், 2-வது நாளான நேற்று சமூக நீதி மாநாடும் நடைபெற்றது. மாநாட்டுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார்.

அம்பேத்கர் படத்தை பேராசிரியர் காளிமுத்துவும், அண்ணா படத்தை ஆதித்தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் அதியமான், காமராசர் படத்தை இந்திய சமூக நீதி இயக்க தலைவர் எஸ்றா.சற்குணம், கலைஞர் படத்தை கர்நாடக மாநில பிற்பட்டோர் ஆணையம் தலைவர் காந்தராஜா ஆகியோர் திறந்து வைத்தனர். மாநாட்டை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து தீர்மான அரங்கம், மகளிர் கருத்தரங்கம் ஆகியவை நடந்தது. மாலையில் மாநாட்டு நிறைவரங்கம் நடைபெற்றது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொகிதின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த அருணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாகிருல்லா ஆகியோர் பேசினர். கி.வீரமணி நிறைவுரையாற்றினார்.

தஞ்சையில் நடந்த திராவிடர் கழக சமூக நீதி மாநாட்டில் கலந்து கொண்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

திராவிடர் கழகம் நடத்தும் மாநாட்டிற்கு நான் எப்போதும், எந்த நேரத்திலும், எந்த சூழ்நிலையிலும், எந்த காலக்கட்டத்திலும் வருவேன். 1976-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டு மிசா சட்டத்தில் தமிழக தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அப்போது நான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட போது, அங்கு இருந்த வீரமணி தான், என்னை கொள்கை வீரனாக பயிற்றுவித்தார். பெரியார் உயிர் பிரிகிற நேரத்திலும், கடைசி வரை தனது சுற்று பயணத்தை நிறுத்தியது கிடையாது. வாழ்நாள் முழுவதும் பயணம் மேற்கொண்டார். பெரியாரிடம் பயிற்சி பெற்றவர் வீரமணி. அவரும் தொடர்ந்து மக்களுக்காக உழைத்துக் கொண்டு இருக்கிறார். நானும் உழைக்க ஒரளவு முயற்சி செய்கிறேன்.

தன்மானத்தோடு, சுயமரியாதையோடு வாழ திராவிட இயக்கத்தை விட்டால் வேறு எதுவும் கிடையாது. தி.மு.க.வும், தி.க.வும் இரட்டை குழல் துப்பாக்கி என்று கருணாநிதி கூறினார். தி.க.வும், தி.மு.க.வும் இரட்டை குழல் துப்பாக்கி மட்டும் அல்ல, காவல் தெய்வங்களாக விளங்கிக் கொண்டு இருக்கிறது. இந்த 2 கழகங்கள் இருக்கிற வரை எத்தனை காவிகள், மத அமைப்புகள், சாதி அமைப்புகளை கூட்டிக்கொண்டு வந்தாலும் திராவிட இயக்கத்தை எந்த கொம்பனாலும் வீழ்த்த முடியாது.

மத்தியில் மோடி தலைமையில் உள்ள அரசு சமூக நீதியை குழி தோண்டி புதைத்துக்கொண்டு இருக்கிறது. அதை நேரடியாக செய்யாமல் மறைமுகமாக, தந்திரமாக செய்கிறது. கல்வி, வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என்பது தான் சமூக நீதி. ஆனால் அன்றே பொருளாதார ரீதியாக இந்த இட ஒதுக்கீடு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியபோது அன்றைய பிரதமர் நேரு மறுத்து விட்டார். ஆனால் அந்த பெருளாதார அளவு கோலை, பிரதமர் மோடி இன்று கொண்டு வந்துள்ளார். இது சமூக நீதி கொள்கையை குழி தோண்டி புதைப்பது ஆகும்.

ஓட்டு, அரசியல் லாபத்துக்காக பொருளாதார ரீதியாக இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று ஓட்டுக்காக மத்திய அரசு விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்குகிறது. ஆனால் விவசாயிகள் டெல்லியில் போராடிய போது மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. 5 மாநில தேர்தலில் தோற்றதால் மக்களை ஏமாற்றி எப்படியாவது ஓட்டு வாங்க வேண்டும் என்பதற்காக ரூ.6 ஆயிரம் வழங்குகிறார்கள். இது பூச்சி மருந்து வாங்க கூட பத்தாது. தமிழக அரசு ரூ.2 ஆயிரம் வழங்குகிறது. தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளுக்கு எவ்வளவோ சாதனைகள் செய்யப்பட்டன.

மோடி ஆட்சியை அப்புறப்படுத்தும் நாள் நெருங்கிக்கொண்டு இருக்கிறது. பிரதமர் மோடியுடன் சேர்ந்துள்ள அனைவரையும் எதிர்த்துக்கொண்டு இருக்கிறோம். மதவாத சக்திகளை தேர்தல், பிரசார களத்தில் முறியடிக்க தி.க. இந்த மாநாட்டை கூட்டி உள்ளது. எனவே இன எதிரிகளை வீழ்த்திட வாரீர். தயாராவீர். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story