விவசாயிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம்: வேளாண் செலவுகளை ஈடுகட்ட உதவியாக இருக்கும் உதவித்தொகை பெற்றவர்கள் கருத்து


விவசாயிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம்: வேளாண் செலவுகளை ஈடுகட்ட உதவியாக இருக்கும் உதவித்தொகை பெற்றவர்கள் கருத்து
x
தினத்தந்தி 24 Feb 2019 11:38 PM GMT (Updated: 24 Feb 2019 11:38 PM GMT)

விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும் வகையில் ரூ.2 ஆயிரம் தவணைத் தொகை வழங்கும் திட்டம், வேளாண் செலவுகளை ஈடுகட்ட உதவியாக இருக்கும் என்று சிறு, குறு விவசாயிகள் கூறியுள்ளனர்.

சென்னை,

சென்னை கலைவாணர் அரங்கத்தில் பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் முதல் தவணைக்கான நிதி வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் சிறு, குறு விவசாயிகள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு நிதி உதவிக்கான சான்று வழங்கப்பட்டது. மத்திய அரசின் இந்த விவசாய நிதி உதவி திட்டம் பற்றி விவசாயிகள் சிலர் தெரிவித்த கருத்து வருமாறு:-

வேலூர் மாவட்டம் செங்காடு கிராமம் பெரிய தகரகுப்பம் பிச்சைமணி:-
நான் கரும்பு, நெல், நிலக்கடலை, கேழ்வரகு போன்றவற்றை பயிரிட்டு வருகிறேன். தண்ணீர் பற்றாக்குறையால் விளைச்சல் ஒன்றும் இல்லை. நெல், நிலக்கடலை போன்ற பயிர்கள் காய்ந்துவிட்டன. எனவே அவை ஆடு, மாடுகளுக்கு மேய்ச்சலாக ஆகிவிட்டன.

கடும் வறட்சியும், தண்ணீர் பற்றாக்குறையும் அதிகம் உள்ளது. நிலத்தடி நீரும் இல்லை. எனவே வாழ்க்கைக்கு விவசாயம் கைகொடுக்காத நிலையில், ஆடு, மாடு வளர்ப்பு, பால் விற்பனை, கோழி வளர்ப்பு போன்ற வேளாண்மை தொடர்புடைய தொழில்களையே நம்பி இருக்கிறோம்.

ஆனாலும் கடும் வறட்சியால் அவற்றுக்கும் புல் கிடைப்பதில்லை. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விட்டது. இந்த சூழ்நிலையில் இதுபோல் தரப்படும் ரூ.2 ஆயிரம் மிகவும் உதவிகரமாக உள்ளது. நொடிந்து போயிருக்கும் நிலையில் இது சற்று ஆறுதலை தருகிறது. எனவே இந்த திட்டத்தை வரவேற்கிறேன்.

கிருஷ்ணன் மற்றும் மணி:- கஷ்ட நேரத்தில் எங்களுக்கு இந்த தொகை அளிக்கப்படுவது மகிழ்ச்சிக்குரிய ஒன்று. ஆனாலும் இந்த தொகை சற்று உயர்த்தி தரப்படலாம் என்பது எங்களின் எதிர்பார்ப்பு.

ஏனென்றால், கிராமங்களை சேர்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு இந்த தொகை உதவிகரமாக இருக்கும். ஆனால் நகரத்தை ஒட்டி இருக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கு அங்குள்ள விலைவாசியை ஒப்பிட்டு பார்க்கும்போது இந்த தொகை குறைவானது தான்.

காஞ்சீபுரம் மாவட்டம் அனுமந்தபுரம் சாந்தி:-
நெல் மற்றும் தோட்டக்கலை பயிர்களை பயிரிட்டு வருகிறோம். விவசாயத்தால் கிடைக்கும் வரவு, அதற்கான செலவுக்கு சரியாக போய்விடுகிறது. மேலும் உரிய விலையும் கிடைப்பதில்லை. விவசாயத்தில் கிடைக்கும் கொஞ்ச லாபத்தில் பெரும்பங்கு, விவசாய கூலி கொடுப்பதற்கே போய்விடுகிறது.

தற்போது தரப்படும் இந்த ரூ.2 ஆயிரம் என்பதும் போதுமானதாக இருக்காது. கடனுக்காக அடகு வைத்த நகைகள் மூழ்கும் நிலையில் உள்ளன. எனவே இந்த தொகையை இன்னும் கொஞ்சம் உயர்த்தி வழங்கலாம்.

காஞ்சீபுரம் மாவட்டம் எச்சூர் லட்சுமி:-
இப்போது செய்யும் விவசாயம் நேரப் போக்குக்கு தான். ஆனாலும் ஆடு, மாடு வளர்ப்பு, பால் விற்பனை போன்றவை மூலம் வாழ்க்கையை ஓட்டுகிறோம். இந்த சூழ்நிலையில் தரப்படும் ரூ.2 ஆயிரம், விவசாய செலவுகளை ஈடுகட்ட உதவியாக இருக்கும். எனவே அதை வரவேற்கிறோம். இந்த தொகையை சற்று உயர்த்தி ஒரே தடவையாக மொத்தமாக அளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அண்ணாமலை:- இது நிச்சயம் வரவேற்கப்பட வேண்டிய திட்டம். ஏதுமில்லாத நிலையில் குறிப்பிட்ட ஒரு தொகை தரப்படுவது சற்று ஆறுதலையும், திருப்தியையும் அளிக்கிறது.

அதாவது, பசித்து அழும் குழந்தைக்கு பால் புகட்டுவதுபோல இந்த திட்டம் அமைந்துள்ளது. எங்கள் வாழ்வாதாரத்துக்கு பலம் சேர்ப்பதாக இது உள்ளது. இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

Next Story