உண்மைகள் கசக்கத்தான் செய்யும் என்று அன்புமணி குற்றச்சாட்டுக்கு விஷ்ணு பிரசாத் பதிலடி


உண்மைகள் கசக்கத்தான் செய்யும் என்று அன்புமணி குற்றச்சாட்டுக்கு விஷ்ணு பிரசாத் பதிலடி
x
தினத்தந்தி 26 Feb 2019 6:00 AM GMT (Updated: 26 Feb 2019 6:00 AM GMT)

ஸ்டாலின் சொல்லி ஒரு தொகுதிக்காக தான் பேசினேன் என்று கூறுவது சரியல்ல என்றும் உண்மைகள் கசக்கத்தான் செய்யும் என்றும் அன்புமணி குற்றச்சாட்டுக்கு விஷ்ணு பிரசாத் பதில் அளித்துள்ளார்.

சென்னை,

பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க.வை தி.மு.க. கூட்டணியில் சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கான பேச்சுவார்த்தையில் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணியின் மைத்துனர் விஷ்ணு பிரசாத் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியானது.

ஆனால் பா.ம.க.வோ, திடீரென அ.தி.மு.க - பா.ஜனதா கூட்டணியில் இணைந்து விட்டது.

இதனைத்தொடர்ந்து, பா.ம.க.வை விஷ்ணுபிரசாத் கடுமையாக விமர்சனம் செய்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருச்சியில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் பேசிய அவர் பா.ம.க. மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். அவர் பேசும்போது, தமிழகத்தை ஆள அ.தி.மு.க.வுக்கு என்ன தகுதி இருக்கிறது? என்று பா.ம.க. தலைவர்கள் ஒரு வாரத்துக்கு முன்புதான் கூறி இருந்தனர்.

இப்போது அ.திமு.க.வுடன் கூட்டணி ஒப்பந்தம் போட்டுள்ளனர். கூட்டணிக்காக பணபேரம் நடந்துள்ளது என்று குற்றம் சாட்டி இருந்தார்.

விஷ்ணுபிரசாத்தின் இந்த பேச்சு எனக்கும், எனது மனைவிக்கும் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தி இருப்பதாக அன்புமணி வருத்தம் தெரிவித்தார்.

இது தொடர்பாக நேற்று அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கல்லூரியில் என்னோடு படித்த விஷ்ணு பிரசாத், 28 ஆண்டுகளாக எனது மைத்துனராக உள்ளார்.

எனது 3 மகள்களுக்கும் அவரது மடியில் வைத்துதான் காதுகுத்தி முடிஎடுத்தோம். அவர் இப்படி விமர்சிப்பார் என்று கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்தான் இதற்கு காரணம்.

அவரது தந்தை கருணாநிதி, எங்களை விமர்சிக்க வேண்டும் என்றால் துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தை வைத்துதான் அறிக்கை வெளியிட வைப்பார்.

ஸ்டாலின் ஒருபடி மேலே போய், எனது உறவினரை வைத்து விமர்சனம் செய்துள்ளார். எங்களை எதிர்த்தால் தான் அவருக்கு ஒரு சீட்டு என்று கூறி இருப்பார்கள்.

அதற்கு 30 ஆண்டு கால பந்த பாசத்தை, குடும்பத்தை விட்டுக் கொடுப்பார் என்று கனவிலும் நினைக்கவில்லை. இவ்வாறு அன்புமணி கூறினார்.

இதுபற்றி விஷ்ணு பிரசாத் கூறி இருப்பதாவது:-

எனது தந்தையும், நானும் பாராளுமன்ற தேர்தல்களில் இதற்கு முன்னர் பா.ம.க.வினரால் தோற்கடிக்கப்பட்டோம். அதனை அரசியலாகத்தான் பார்த்தேன். உறவாக பார்க்கவில்லை. ஸ்டாலின் சொல்லி ஒரு தொகுதிக்காக தான் பேசினேன் என்று கூறுவது சரியல்ல.

காங்கிரஸ் செயல் தலைவர் என்ற முறையில் ஒரு தொகுதிக்காக அல்ல, 40 தொகுதிகளுக்காகவும் பேசினேன்.

டாக்டராக இருப்பவர்களுக்கு அறுவை சிகிச்சை வலி என்ன என்பது தெரியும், மருந்து கசப்பு பற்றியும் நன்றாக தெரியும். அதே போல உண்மைகள் கசக்கத்தான் செய்யும். இவ்வாறு விஷ்ணுபிரசாத் கூறியுள்ளார்.

Next Story