அடுத்து யார் ஆட்சி அமையப் போகிறது என்பதை அறுதியிட்டு கூறுவதாக அமைந்தது மு.க.ஸ்டாலின் அறிக்கை


அடுத்து யார் ஆட்சி அமையப் போகிறது என்பதை அறுதியிட்டு கூறுவதாக அமைந்தது மு.க.ஸ்டாலின் அறிக்கை
x
தினத்தந்தி 26 Feb 2019 11:05 PM GMT (Updated: 26 Feb 2019 11:05 PM GMT)

கடந்த 1½ மாதங்களாக தி.மு.க. நடத்திய ஊராட்சி சபை கூட்டங்கள் நிறைவடைந்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், அடுத்து யார் ஆட்சி அமையப்போகிறது என்பதை அறுதியிட்டு கூறுவதாக அமைந்தது என்று கூறியுள்ளார்.

சென்னை,

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. செயல் தலைவராக சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டங்களில் கட்சியின் ஊராட்சி செயலாளர்களை நேரில் சந்தித்து அவர்களிடம் உரையாடி, இயக்கத்தின் நிலையையும் மக்களின் தேவையையும் அறிந்துகொண்டேன். தி.மு.க. தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட பிறகு, ஒவ்வொரு ஊராட்சிக்கும் தி.மு.க. நிர்வாகிகள் நேரில் சென்று, மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளை, கோரிக்கைகளை, விருப்பங்களை, விண்ணப்பங்களை, குமுறல்களை அறிந்து உணரும் பெரும் முயற்சிக்கான செயல்திட்டம் வகுக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்து 617 ஊராட்சிகளிலும் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. அனைத்து ஊராட்சிகளிலும் தி.மு.க.வினர் கூட்டங்களை நடத்தியதன் அடையாளமாக, அந்தந்த ஊராட்சிகளிலும் தி.மு.க. கொடி ஏற்றப்பட்டுள்ளது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் தி.மு.க. வெற்றிக்கொடி பட்டொளி வீசிப் பறக்கிறது.

விரைந்து வரவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் அதனைத் தொடர்ந்து வரவிருக்கின்ற சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க. கூட்டணி பெறப்போகிற மகத்தான வெற்றிக்கு கட்டியம் கூறும் வகையில் தி.மு.க. கொடி பறப்பதை உங்களில் ஒருவனான நான் கண் குளிர மனம் குளிரப்பார்க்கிறேன்.

உள்ளாட்சித் தேர்தலை நடத்தாதவர்களையும் அவர்களுக்குத் துணையாக நின்றவர்களையும் ஜனநாயகக் களமான மக்களவைத் தேர்தலிலும் அதனைத் தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலிலும் விரட்டியடித்திட மக்கள் தயாராகி விட்டார்கள்.

அடுத்தது அமையப் போவது யார் ஆட்சி என்பதை அறுதியிட்டுக் கூறுவதாக அமைந்தது ஊராட்சிகள் தோறும் தி.மு.க. நடத்திய கூட்டங்கள். சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்றதாலும், வேறு சில உள்ளூர் காரணங்களாலும் ஒரு சில ஊராட்சிகளைத் தவிர மற்ற அனைத்து ஊராட்சிகளிலும் மக்கள் பங்கேற்புடன் கூட்டங்கள் நடந்து முடித்திருக்கின்றன. கூட்டங்கள் நடைபெறாத ஊராட்சிகளிலும் விரைவில் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்பதை பொறுப்பாளர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story