மனைவியுடன் தகராறு: ஜன்னல் கண்ணாடியை உடைத்த போலீஸ்காரர் சாவு கை நரம்பு துண்டானதால் பரிதாபம்


மனைவியுடன் தகராறு: ஜன்னல் கண்ணாடியை உடைத்த போலீஸ்காரர் சாவு கை நரம்பு துண்டானதால் பரிதாபம்
x
தினத்தந்தி 24 March 2019 8:01 PM GMT (Updated: 24 March 2019 8:01 PM GMT)

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் ஜன்னல் கண்ணாடியை கையால் உடைத்ததில் நரம்பு துண்டானதால் போலீஸ்காரர் பரிதாபமாக இறந்தார்.

கடையநல்லூர், 

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் தாலுகா அச்சன்புதூர் அருகே உள்ள வடகரை புது பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சுடலைமுத்து மகன் கருப்பசாமி (வயது 29). இவருடைய மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு 5 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது.

போலீஸ்காரரான கருப்பசாமி நாங்குநேரி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தார். தற்போது அவர் தேர்தல் பறக்கும் படையில் பணியாற்றினார். கருப்பசாமி நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் பணி முடிந்து தனது வீட்டுக்கு வந்தார். புதிய வீடு கட்டியதில் கடன் தொல்லை இருந்து வந்ததாகவும், இதுதொடர்பாக அவருக்கும், மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சிகிச்சை பலனின்றி சாவு

இதில் ஆத்திரம் அடைந்த கருப்பசாமி, வீட்டின் ஜன்னல் கண்ணாடியை தனது கையால் ஓங்கி உடைத்துள்ளார். இதில் கை நரம்பு துண்டிக்கப்பட்டு ரத்தம் வெளியேறியது. இதையடுத்து அவரை வடகரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை கருப்பசாமி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து அச்சன்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story