அரசியல் கட்சியினர் மது வாங்கி கொடுக்கிறார்களா? கலெக்டர்கள் கண்காணிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு


அரசியல் கட்சியினர் மது வாங்கி கொடுக்கிறார்களா? கலெக்டர்கள் கண்காணிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு
x
தினத்தந்தி 24 March 2019 11:30 PM GMT (Updated: 24 March 2019 8:15 PM GMT)

தேர்தல் பணியில் ஈடுபடும் தொண்டர்களை உற்சாகப்படுத்த அரசியல் கட்சியினர் மது வாங்கி கொடுக்கிறார்களா? என்பது குறித்து மாவட்ட கலெக்டர்கள் கண்காணிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை, 

‘குவார்ட்டருக்கும், கோழி பிரியாணிக்கும் கூடுகிற கூட்டம் அல்ல இது’ என்று தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கூடியிருக்கும் தொண்டர்களை பார்த்து அரசியல் கட்சி தலைவர்கள் பேசும் வழக்கமான பேச்சுகளில் இதுவும் ஒன்று.

பொதுக்கூட்டங்களில் அரசியல் கட்சி தலைவர்கள் இதுபோன்று பேசினாலும் தேர்தல் என்றாலே மதுப்பிரியர்களுக்கு தனி கவனிப்பு உண்டு. மதுப்பிரியர்களுக்கு தினம்தோறும் மதுபாட்டில்களை வழங்கி அவர்களை உற்சாகப்படுத்தி தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட வைக்கும் கலையை அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் செய்ய தவறுவது இல்லை என்பது தான் உண்மை.

இதை அறிந்த தேர்தல் ஆணையம், தேர்தல் பணியில் ஈடுபடும் தொண்டர்களை உற்சாகப்படுத்த அரசியல் கட்சியினர் மது வாங்கி கொடுக்கிறார்களா? என்பதை கண்காணிக்க முடிவு செய்தது.

கட்டுப்படுத்த முடிவு

டாஸ்மாக் மதுபானக்கடையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த விற்பனையை விட இந்த ஆண்டு விற்பனை அதிகரித்து உள்ளதா? அதற்கான காரணம் என்ன? என்பது போன்ற விவரங்களை அதிகாரிகள் மூலம் பெற்று தேர்தலுக்காக மதுபாட்டில்கள் வினியோகிப்பதை கட்டுப்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

இதற்காக மது விற்பனை குறித்த அறிக்கையை தினமும் தாக்கல் செய்ய டாஸ்மாக் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கமிஷனர் (பொறுப்பு) கிர்லோஷ்குமார், அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தேர்தலுக்காக மதுபானங்களை பதுக்கி வைப்பதையும், சட்டவிரோதமாக மதுபாட்டில்களை வினியோகிப்பதை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

கண்காணிக்க வேண்டிய கடைகள்

இதன்படி செயல்பட வேண்டியது கலெக்டர்கள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், போலீஸ் சூப்பிரண்டுகளின் பொறுப்பு ஆகும். இதை கருத்தில் கொண்டு தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டிய டாஸ்மாக் கடைகள் எவை? என்பதை அதிகாரிகள் பட்டியலிட வேண்டும்.

அதாவது, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மார்ச் மாதம் 50 சதவீதம் அல்லது அதற்கு அதிகமாக மதுபாட்டில்கள் இருப்பு உள்ள டாஸ்மாக் கடைகள், குடியிருப்பு பகுதி அல்லது குடியிருப்பு பகுதிகளுக்கு மிக அருகில் உள்ள கடைகள், கடந்த மாதத்தை ஒப்பிடும்போது இந்த மாதத்தில் ஏதாவது ஒருநாளில் வழக்கமான விற்பனையை விட 30 சதவீதம் கூடுதலாக மதுபாட்டில்கள் விற்பனையான கடைகள் போன்ற கடைகள் தொடர்ந்து கண்டிப்பாக கண்காணிக்கப்பட வேண்டும்.

கலெக்டர் அறிவுறுத்த வேண்டும்

அந்த கடைகளில் உள்ள மதுபான ரகங்களின் தினசரி இருப்பை சரிபார்க்க வேண்டும்.

இதுபோன்ற மதுபானக்கடைகளில் குறிப்பிட்ட நாளில் கடந்த மாதத்தை விட கூடுதலாக 30 சதவீதம் மதுபாட்டில் விற்பனையாகி இருந்தால் சம்பந்தப்பட்ட கடையின் முகவரி, சராசரி விற்பனை, குறிப்பிட்ட நாளில் அதிகரித்துள்ள விற்பனை சதவீதம், அதற்கான காரணம், எடுத்த நடவடிக்கை குறித்து அந்தந்த பகுதியைச் சேர்ந்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துணை கமிஷனர், உதவி கமிஷனர் ஆகியோர் அறிக்கை அளிக்க மாவட்ட கலெக்டர் அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story