வாக்கி டாக்கி ஊழல் விவகாரம்; அ.தி.மு.க. அரசு மீது அவதூறு பரப்பும் ஸ்டாலின் மீது வழக்கு: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி


வாக்கி டாக்கி ஊழல் விவகாரம்; அ.தி.மு.க. அரசு மீது அவதூறு பரப்பும் ஸ்டாலின் மீது வழக்கு:  அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 25 March 2019 12:12 PM GMT (Updated: 25 March 2019 12:12 PM GMT)

வாக்கி டாக்கி வாங்கியதில் ஊழல் என அ.தி.மு.க. அரசு மீது அவதூறு பரப்பும் ஸ்டாலின் மீது வழக்கு தொடரப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக காவல் துறைக்கு வாக்கி-டாக்கி வாங்கியதில் ஊழல் நடந்துள்ளது என குற்றச்சாட்டு கூறப்பட்டது.  இதற்காக விடப்பட்ட டெண்டரில் விதிமீறல்கள் இருக்கிறது என்றும், கடந்த 2017-18வது ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் காவல் துறையை நவீனமயமாக்க 47 கோடி ரூபாய் நிதிதான் ஒதுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளபோது,  88 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டு உள்ளது என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.

88 கோடி ரூபாய் டெண்டரில் ஒரேயொரு நிறுவனம் மட்டும் கலந்து கொண்ட நிலையில், அந்த  ஒரே நிறுவனத்துக்கே ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது என்றும் இந்த டெண்டரால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்றும் இதில் நடைபெற்ற ஊழல் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதன்பின்பு, 84 கோடி ரூபாய் காவல்துறைக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் ஊழல் நடந்துள்ளது என தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு கூறினார்.  இதுபற்றி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் முன்பு கூறினார்.

இந்நிலையில் காஞ்சிபுரத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் காஞ்சிபுரம் (தனி) மற்றும் திருப்போரூர் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று பேசினார்.  அவர் பேசும்பொழுது, வாக்கி டாக்கி வாங்கியதில் நடந்த ஊழலில் மீன்வள துறை அமைச்சர் ஜெயக்குமாருக்கு தொடர்பு உள்ளது என குற்றச்சாட்டு கூறினார்.

இதனை தொடர்ந்து, வாக்கி டாக்கி வாங்கியதில் ஊழல் என அ.தி.மு.க. அரசு மீது அவதூறு பரப்பும் ஸ்டாலின் மீது நிச்சயம் வழக்கு தொடரப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Next Story