நாடாளுமன்ற-சட்டமன்ற தொகுதி இடைதேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்


நாடாளுமன்ற-சட்டமன்ற தொகுதி இடைதேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்
x
தினத்தந்தி 26 March 2019 1:11 AM GMT (Updated: 26 March 2019 1:11 AM GMT)

நாடாளுமன்ற-சட்டமன்ற தொகுதி இடைதேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் ஆகும்.

சென்னை, 

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன், 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலும் ஏப்ரல் 18-ந் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்ய கடந்த 19-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை (அதாவது, இன்று) தேர்தல் ஆணையம் கால அவகாசம் வழங்கியது.

23 மற்றும் 24-ந் தேதி (சனி, ஞாயிறு) விடுமுறை தினம் என்பதால் அந்த 2 நாட்களும் வேட்புமனு தாக்கல் நடைபெறவில்லை. நேற்று அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் பலர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்

இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெறுகிறது. இன்று கடைசி நாள் என்பதால் அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்ய தேர்தல் அலுவலகத்தை நோக்கி படையெடுத்து வருவார்கள் என தெரிகிறது.

பெரும்பாலான அரசியல் கட்சி வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் முக்கிய கட்சியினர், அ.ம.மு.க. வேட்பாளர்களும், மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்களும், சுயேச்சைகளும் கடைசி நாளான இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.

மத்திய சென்னை தொகுதி தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறன், அ.ம.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் மத்திய சென்னை தொகுதி எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர் தெகலான் பாகவி ஆகியோரும் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்கள்.

வேட்புமனு தாக்கல் முடிந்தவுடன் மனுக்கள் மீதான பரிசீலனை நாளை (புதன்கிழமை) நடக்கிறது. அப்போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை முறையாக பின்பற்றாத வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்படும். அதன் பின்னர் தேர்தலில் போட்டியிட தகுதியான வேட்பாளர்கள் பட்டியல் தயார் செய்யப்படும். தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என்று நினைப்பவர்கள் வேட்புமனுவை 29-ந் தேதிக்குள் திரும்ப பெற்றுக்கொள்ள கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் வேட்பாளர்கள் இறுதி பட்டியலை 29-ந் தேதி இரவு அதிகாரபூர்வமாக தேர்தல் ஆணையம் வெளியிடும்.

Next Story