ஆக்கிரமிப்புகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் குறித்து புகார் செய்யலாம் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு


ஆக்கிரமிப்புகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் குறித்து புகார் செய்யலாம் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 9 April 2019 11:00 PM GMT (Updated: 9 April 2019 7:19 PM GMT)

ஆக்கிரமிப்புகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் புகார் செய்யலாம் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

திருவள்ளூர் மாவட்டத்தில் நீர்நிலை, அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து கட்டியுள்ள கட்டிடங்களுக்கு மின்சார இணைப்பை துண்டிக்கவும், அந்த கட்டிடங்களை இடித்து தள்ளவும் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் எம்.வேணுகோபால், நீதிபதி எஸ்.வைத்தியநாதன் ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தனர்.

இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஐகோர்ட்டு உத்தரவின்படி, மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டு விட்டதாக அரசு வக்கீல் கூறினார்.

அதேநேரம், சட்டவிரோதமாக நீர்நிலைகள், புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை ஒழுங்குபடுத்துவதற்காக செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அதிகாரிகள் முன்பு நீண்டகாலமாக நிலுவையில் இருந்து வருவது தெரியவந்தது.

விவரம் தெரியவில்லை

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

எத்தனை விதிமீறல் கட்டிடங்கள் ஒழுங்குபடுத்த விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது? என்ற விவரமும், எத்தனை மனுக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்னிலையில் நிலுவையில் உள்ளது? என்ற விவரமும் அரசு வக்கீலுக்கு தெரியவில்லை.

கோர்ட்டு உத்தரவை அமல்படுத்தாமல், அலட்சியம் செய்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் சிக்கும் அதிகாரிகளுக்கு பதவி மற்றும் ஊதிய உயர்வை கொடுக்கக்கூடாது. அவர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்கவேண்டும் என்று இந்த ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அப்படி இருக்கும்போது, நீர்நிலை ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் உள்ளனர்.

அதிகாரிகள் செய்வது இல்லை

தமிழக வருவாய்த்துறை முதன்மை செயலாளர், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர், பூந்தமல்லி தாசில்தார் ஆகியோர் இன்று (புதன்கிழமை) நேரில் ஆஜராக வேண்டும். நீர்நிலைகள், சாலைகள், பொதுஇடங்கள் ஆகியவற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை ஒழுங்குபடுத்த விண்ணப்பம் செய்ய முடியாது. ஒழுங்குபடுத்தவும் அதிகாரிகளால் முடியாது. இதுகுறித்து தமிழ்நாடு நகரமைப்புச் சட்டம், பிரிவு 113-சி-யின் கீழ் கடந்த 2017-ம் ஆண்டு பிறப்பித்த அரசாணையை இந்த ஐகோர்ட்டு ரத்து செய்துவிட்டது.

எனவே, இதுபோன்ற விதிமீறல் கட்டிடங்களை ஒழுங்குபடுத்த கோரும் அனைத்து மனுக்களையும், ஒரே நொடியில், ஒரே உத்தரவில் அதிகாரிகள் தள்ளுபடி செய்துவிட முடியும். இருந்தாலும், அதை அதிகாரிகள் செய்வது இல்லை.

புகார் செய்யலாம்

எனவே, இதுகுறித்து இன்று நேரில் ஆஜராகும் அதிகாரிகள் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும். மேலும், நீர்நிலை, சாலை, பொதுஇடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் அதிகாரிகள் குறித்த விவரங்கள் பொதுமக்களுக்கு தெரிந்தால், அவர்கள் இந்த ஐகோர்ட்டுக்கு தெரியப்படுத்தலாம்.

அவ்வாறு தகவல் தெரியப்படுத்தும்பட்சத்தில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது தாமாக முன்வந்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கை பதிவு செய்து, நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Next Story