காற்றழுத்த தாழ்வு நிலை, வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் கோடை மழை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்


காற்றழுத்த தாழ்வு நிலை, வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் கோடை மழை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 21 April 2019 10:56 PM GMT (Updated: 21 April 2019 10:56 PM GMT)

காற்றழுத்த தாழ்வு நிலை, வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் கோடை மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெயில் வறுத்தெடுத்து வருகிறது. கோடை வெயிலின் தாக்கம் காரணமாக பொதுமக்கள் கடுமையான அவதிக்குள்ளாகி வருகிறார்கள். அதேசமயத்தில் கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை, தேனி, நாமக்கல், கிருஷ்ணகிரி, திருச்சி உள்ளிட்ட சில மாவட்டங்களில் கோடை மழை பெய்துள்ளது.

ஊட்டி, ஓசூர், வால்பாறை, ஓமலூர், மேட்டூர் உள்ளிட்ட இடங்களில் மழைக்காலங்களில் பெய்வது போன்று நேற்று முன்தினம் கோடை மழை கொட்டி தீர்த்துள்ளது. இந்தநிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த சில நாட்களுக்கு கோடை மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

குமரிக்கடல் பகுதியில் வளிமண்டலத்தில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்துள்ளது. இது மேலும் வலுப்பெறுமா என்பது அதன் நகர்வை பொறுத்து நாளை (இன்று) தான் தெரியவரும். காற்றழுத்த தாழ்வு நிலை, வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேலும் 23-ந் தேதி முதல் 25-ந் தேதி வரையிலான நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தமட்டில் வானம் பகுதியாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.

வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கோவை மற்றும் நெல்லை ஆகிய 14 மாவட்டங்களில் வழக்கத்தை விடவும் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிப்பதற்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

நேற்று காலை 8.30 மணியோடு நிறைவடைந்த 24 மணி நேர நிலவரப்படி தமிழகத்தில் பதிவான மழை அளவு வருமாறு:-

ஊட்டியில் அதிகபட்சமாக 10 செ.மீ. மழை பதிவாகியிருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக வால்பாறை, ஓசூர், ஓமலூர், மேட்டூரில் தலா 7 செ.மீ. மழையும், குன்னூர், பரூரில் தலா 6 செ.மீ. மழையும், பேச்சிப்பாறை, குமாரப்பாளையம், பாப்பிரெட்டிப்பட்டி, திருச்செங்கோடு, பெரியகுளம், துறையூரில் தலா 4 செ.மீ. மழையும், கோத்தகிரி, செங்கோட்டை, ஸ்ரீவைகுண்டம், நடுவட்டம், சங்கரிதுர்க்கத்தில் தலா 3 செ.மீ. மழையும், மயிலாடி, அரூர், தர்மபுரி, ஆத்தூர், ஆண்டிப்பட்டி, மணப்பாறை, கடவூர், தளி, நாமக்கல், திருப்பத்தூர், குழித்துறையில் தலா 2 செ.மீ. மழையும், பென்னாகரம், ஏற்காடு, தென்காசி, ராதாபுரம், லால்குடி, ராசிபுரம், மன்னார்குடி, கழுகுமலையில் தலா 1 செ.மீ. மழையும் பெய்துள்ளது.

Next Story