அமமுகவை தனிக்கட்சியாக அங்கீகரிக்க கோரி தலைமை தேர்தல் ஆணையத்தில் தினகரன் விண்ணப்பம்


அமமுகவை தனிக்கட்சியாக அங்கீகரிக்க கோரி தலைமை தேர்தல் ஆணையத்தில் தினகரன் விண்ணப்பம்
x
தினத்தந்தி 22 April 2019 6:31 AM GMT (Updated: 22 April 2019 6:31 AM GMT)

அமமுகவை தனிக்கட்சியாக அங்கீகரிக்க கோரி தலைமை தேர்தல் ஆணையத்தில் தினகரன் விண்ணப்பம் செய்துள்ளார்.

புதுடெல்லி,

மக்களவைத் தேர்தலுக்கு அமமுக சார்பில் குக்கர் சின்னம் கோரிய வழக்கில், அமமுக பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி அல்ல என்பதால், அவர்களுக்கு அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே சின்னமாக குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறியது. இதில், அமமுகவை கட்சியாக பதிவு செய்ய தயார் என டிடிவி தினகரன் கூறியிருந்தார். 

இதைத்தொடர்ந்து, டிடிவி தினகரனுக்கு தேர்தல்களில் பொதுச்சின்னம் தர பரிசீலிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்பேரில், மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலுக்கு அமமுகவிற்கு 'பரிசுப்பெட்டி' சின்னம் ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் அமமுகவைச் சேர்ந்த வேட்பாளர்கள் சுயேச்சையாகவே போட்டியிட்டனர்.

இந்நிலையில், தேர்தல் சின்னம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடந்த போது, நீதிமன்றத்தில் உறுதியளித்தபடி, அமமுகவை கட்சியாக பதிவு செய்ய டிடிவி தினகரன் முடிவெடுத்தார். இதற்காக, அண்மையில்  நடந்த அமமுக நிர்வாகிகள் கூட்டத்திற்கு பிறகு  அமமுக பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் பதவியேற்றார். 

இந்த நிலையில்,  அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தனிக்கட்சியாக அங்கீகரிக்க கோரி தலைமை தேர்தல் ஆணையத்தில் தினகரன் விண்ணப்பம் அளித்துள்ளார்.  தினகரன் விண்ணப்பம் மீது தலைமை தேர்தல் ஆணையம் இன்றே முடிவெடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story