வாகனங்களில் கொடிகள் கட்டிக்கொள்ள சட்டப்படி அனுமதி உள்ளதா? மதுரை ஐகோர்ட்டு கேள்வி


வாகனங்களில் கொடிகள் கட்டிக்கொள்ள சட்டப்படி அனுமதி உள்ளதா? மதுரை ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 22 April 2019 10:00 PM GMT (Updated: 22 April 2019 9:15 PM GMT)

வாகனங்களில் கொடி கட்டிக்கொள்ள சட்டப்படி அனுமதி உள்ளதா? என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மதுரை,

மதுரையை சேர்ந்த வக்கீல் ஸ்டாலின், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

நாடு முழுவதும் தற்போது தேசிய நெடுஞ்சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு 4 வழிச்சாலை, 6 வழிச்சாலை ஆகின்றன. பின்னர் இந்த சாலைகளை பராமரிக்கும் பணிகள் தனியார் வசம் ஒப்படைக்கப்படுகிறது. அவர்கள் சுங்கச்சாவடிகளை அமைத்து சாலைகளை பராமரிப்பு செய்ய வேண்டும்.

முக்கியமாக சாலைகள் இணைப்பு பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும். வளைவு பகுதியில் சிவப்பு எச்சரிக்கை விளக்கு பொருத்த வேண்டும். சாலைகள் நடுவே அரளிச் செடிகள் நடப்பட வேண்டும். ஆனால் இந்த பணிகள் ஏதும் முழுமையாக செய்யப்படவில்லை.

விபத்துகள் அதிகரிப்பு

இதனால் தற்போது சாலை விபத்துகள் அதிகரித்துள்ளன. மேலும் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் தடை செய்யப்பட்ட எல்.இ.டி. முகப்பு விளக்குகளும், கார்களில் 2-க்கும் மேற்பட்ட விளக்குகளும் பொருத்தப்படுகின்றன. இதனால் எதிரே வரும் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். விபத்திலும் சிக்குகிறார்கள்.

எனவே உரிய நடவடிக்கை எடுத்து விதிகளை மீறி, வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள எல்.இ.டி. விளக்குகளை அகற்ற வேண்டும். ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் சாலை விபத்துகளில் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதில் நாட்டிலேயே 2-வது இடத்தில் தமிழகம் உள்ளது.

இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் அனுமதியின்றி பொருத்தப்பட்டுள்ள எல்.இ.டி. விளக்குகளை அகற்ற உத்தரவிட வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

கொடிகளுக்கு அனுமதி உள்ளதா?

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, “அரசியல் கட்சியினர் தங்களின் வாகனங்களில் கட்சிக்கொடி கட்டிக்கொள்வது, தலைவர்களின் படங்களை வைத்து கொள்வது, தங்களது பதவிகளை வாகனங்களில் பெரிதாக எழுதிக்கொள்வது போன்றவைகளை செய்யாமல் இருந்தாலே பெரும்பாலான விபத்துகள் தடுக்கப்படும்.

இதுபோன்ற செயல்களுக்கு மோட்டார் வாகன சட்டப்படி அனுமதி உள்ளதா?, இந்த நடவடிக்கைகளுக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பின்னர், இதுகுறித்து தமிழக உள்துறை செயலாளர், போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் விளக்கம் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து வழக்கை இன்றைக்கு (செவ்வாய்க் கிழமை) ஒத்திவைத்தனர்.

Next Story