‘காஞ்சனா-3’ படத்தில் நடித்த ரஷிய நடிகைக்கு பாலியல் தொல்லை விளம்பர பட நடிகர் கைது


‘காஞ்சனா-3’ படத்தில் நடித்த ரஷிய நடிகைக்கு பாலியல் தொல்லை விளம்பர பட நடிகர் கைது
x
தினத்தந்தி 23 April 2019 10:00 PM GMT (Updated: 23 April 2019 9:21 PM GMT)

‘காஞ்சனா-3’ படத்தில் நடித்த ரஷிய நடிகைக்கு, பாலியல் தொல்லை கொடுத்த விளம்பர பட நடிகர் கைது செய்யப்பட்டார்.

சென்னை,

ரஷியாவை சேர்ந்த 34 வயதுள்ள பெண் ஒருவர் கணவர் மற்றும் குழந்தைகளுடனும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு சென்னை வந்தார்.

சென்னை எம்.ஆர்.சி.நகரில் வசித்து கொண்டு விளம்பர படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான ‘காஞ்சனா-3’ படத்தில் நடிகர் லாரன்சுடன் இணைந்து நடித்துள்ளார். இந்தநிலையில், அவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

விளம்பர பட நடிகர்

பல விளம்பர படங்களில் நடித்துள்ள ரூபேஷ்குமார் (26) என்பவர் எனக்கு அறிமுகமானார். என்னையும் விளம்பர படங்களில் நடிக்க வைப்பதாக கூறினார். இதற்காக என்னை பல்வேறு கோணங்களில் புகைப்படங்கள் எடுத்தார். அந்த புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து எனக்கு ‘வாட்ஸ்-அப்’பில் அனுப்பினார்.

ஒரு கட்டத்தில் எனக்கு, ரூபேஷ்குமார் பாலியல் தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். அவர் இச்சைக்கு இணங்காவிட்டால், எனது புகைப்படங்களை இணையதளங்களில் வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டுகிறார். இதனால் அவர் மீது, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

கைது

இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் அன்பு, துணை கமிஷனர் செந்தில்குமார், கூடுதல் துணை கமிஷனர் சரவணக்குமார், உதவி கமிஷனர் வேல்முருகன் ஆகியோர் மேற்பார்வையில், மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரை வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்.

புகார் கூறப்பட்டுள்ள விளம்பரபட நடிகர் ரூபேஷ்குமாரை, சைபர் கிரைம் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர் மாதவரம் பொன்னியம்மன் மேடு பகுதியைச் சேர்ந்தவர்.

விளம்பர படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி யாராவது புகைப்படம் எடுக்க அழைத்தால் பெண்கள் மிகவும் கவனமாக இருக்கும்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Next Story