டிக் டாக் செயலிக்கான தடையை நிபந்தனைகளுடன் நீக்கியது உயர்நீதிமன்ற மதுரை கிளை


டிக் டாக் செயலிக்கான தடையை நிபந்தனைகளுடன் நீக்கியது உயர்நீதிமன்ற மதுரை கிளை
x
தினத்தந்தி 24 April 2019 2:03 PM GMT (Updated: 24 April 2019 2:03 PM GMT)

டிக் டாக் செயலிக்கான தடையை உயர்நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனைகளுடன் நீக்கியுள்ளது.

மதுரை,

'டிக் டாக்' செயலியில் கலாச்சாரத்தை இழிவுபடுத்தும் வகையிலும், ஆபாசத்தை ஊக்குவிக்கும் வகையிலும் வீடியோக்கள் வருவதால் அதனை பதிவிறக்கம் செய்ய தடை விதிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்ற கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர் நீதிமன்ற கிளை கடந்த 3ந்தேதி ‘டிக் டாக்’ செயலியை பதிவிறக்கம் செய்ய தடை விதிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. தொடர்ந்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையில், 'டிக் டாக்' நிறுவனம் தடையை நீக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தடையை நீக்க கோரி 'டிக் டாக்' நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மேலும், 'டிக் டாக்' நிறுவன மனுவை விசாரித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை ஏப்ரல் 24 ஆம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும், இல்லையெனில், டிக் டாக்கிற்கு விதிக்கப்பட்ட தடை காலாவதியாகி விடும் எனவும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவில் தெரிவித்திருந்தது.

டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க கோரிய வழக்கு விசாரணையை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று மேற்கொண்டது.  இதில், பெண்கள், சிறுவர்களை பாதிக்கும் வகையில் பதிவுகளை பதிவேற்றம் செய்ய மாட்டோம்.  பாலியல், சமூக சீரழிவுகளை ஏற்படுத்தும் வகையிலும் பதிவுகளை பதிவேற்ற மாட்டோம் என டிக் டாக் நிறுவனம் உறுதி அளித்தது.  இதனை ஏற்று கொண்டு டிக் டாக் செயலிக்கு விதித்த தடையை நிபந்தனைகளுடன் நீக்கி உத்தரவிட்டது.

Next Story