குறைபாடுகளுடன் குழந்தை பிறப்பதை தடுக்க கருக்கலைப்பை 24 வாரமாக நீட்டிக்கக்கோரி வழக்கு மத்திய அரசுக்கு, மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ்


குறைபாடுகளுடன் குழந்தை பிறப்பதை தடுக்க கருக்கலைப்பை 24 வாரமாக நீட்டிக்கக்கோரி வழக்கு மத்திய அரசுக்கு, மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ்
x
தினத்தந்தி 24 April 2019 7:35 PM GMT (Updated: 24 April 2019 7:35 PM GMT)

குறைபாடுகளுடன் குழந்தை பிறப்பதை தடுக்க கருக்கலைப்பை 24 வாரமாக நீட்டிக்கக்கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை

மதுரை ஐகோர்ட்டு பதிவாளர் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

கருக்கலைப்பு சட்டம் குறித்த செய்தி சமீபத்தில் பத்திரிகைகளில் வெளியானது. கருக்கலைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய, சம்பந்தப்பட்ட துறைகளின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் அதில் கூறப்பட்டு இருந்தது.

சட்டப்படி தற்போது 20 வாரம் வளர்ச்சி அடைந்த கருவை கலைக்க அனுமதி உள்ளது. ஆனால் கருவின் வளர்ச்சி குறைபாடுகள் 20 வாரங்களுக்கு பின்பு தான் தெரியவரும். 20 வாரத்துக்கு கூடுதலாக வளர்ந்த கருவை கலைக்க கோர்ட்டு அனுமதி பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இதுபற்றி கிராமப்புறத்தை சேர்ந்தவர்கள் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை. இதனால்தான் கரு கலைப்புக்கான அனுமதியை 24 வாரமாக நீட்டிக்க சட்டத்திருத்தம் செய்ய 2014-ம் ஆண்டிலேயே பரிந்துரைக்கப்பட்டு நிலுவையில் உள்ளது.

20 வாரத்துக்கு பின்பு கருவில் குறைபாடுகள் தெரியவந்தால், அதை கலைக்க அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் குறையுடன் பிறக்கும் குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் சிரமப்படுகிறார்கள். அவர்களின் பெற்றோர்களும் அவதிக்கு ஆளாகின்றனர்.

பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகும் இளம்பெண்கள், சிறுமிகள் 20 வாரத்துக்கும் அதிகமாக வளர்ந்த கருவை கலைக்க கோர்ட்டை நாடுகின்றனர்.

விரைவாக சட்டத்திருத்தம்

கருக்கலைப்பு செய்ய அனுமதியை 20 வாரத்தில் இருந்து 24 வாரமாக நீட்டிக்க மருத்துவ கருக்கலைப்புச்சட்டம் 1971-ல் விரைவாக திருத்தம் கொண்டுவர மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் கருவை கலைக்க கெடு நிர்ணயிக்கக்கூடாது.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்கள், சிறுமிகளை கட்டாயம் கருக்கலைப்பு செய்யவும், கிராமப்புறங்களை சேர்ந்த பெண்களின் கரு வளர்ச்சி குறைபாடுகளை அறியும் எந்திரங்களை போர்க்கால அடிப்படையில் ஆஸ்பத்திரிகளில் பொருத்தவும் உத்தரவிட வேண்டும். இதுபோல கருக்கலைப்பு செய்பவர்களுக்கு உரிய மனநல ஆலோசனையும் வழங்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

நோட்டீஸ்

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

முடிவில், இந்த வழக்கு குறித்து மத்திய அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை ஜூன் மாதம் 26-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Next Story