தி.மு.க.வை அழிக்க நினைத்த சக்திகளுக்கு பதிலடி கிடைத்துள்ளது தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்


தி.மு.க.வை அழிக்க நினைத்த சக்திகளுக்கு பதிலடி கிடைத்துள்ளது தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
x
தினத்தந்தி 25 May 2019 11:30 PM GMT (Updated: 25 May 2019 7:08 PM GMT)

தமிழகத்தில் வெற்றிடத்தை நிரப்ப அவர் வருவார், இவர் வருவார் என்று சூழ்ச்சி செய்து, தி.மு.க.வை அழிக்க நினைத்த திரிபுவாத சக்திகளுக்கு ஜனநாயக ரீதியாக தக்க பதிலடி கிடைத்துள்ளது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

தமிழகத்தில் வெற்றிடத்தை நிரப்ப அவர் வருவார், இவர் வருவார் என்று சூழ்ச்சி செய்து, தி.மு.க.வை அழிக்க நினைத்த திரிபுவாத சக்திகளுக்கு ஜனநாயக ரீதியாக தக்க பதிலடி கிடைத்துள்ளது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

மக்களின் தீர்ப்பு

வரலாற்றுச்சிறப்புமிக்க நாடும் ஏடும் போற்றும் நல்ல மகத்தான வெற்றியைத் தமிழ்நாட்டு மக்கள் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக்கூட்டணிக்கு மனமுவந்து வழங்கியிருக்கிறார்கள். ஊடகங்களிடம் வெற்றிச் செய்தியினைப் பகிர்ந்துகொள்ளும் தோழமைக் கட்சித் தலைவர்களும் ஆதரவு அமைப்புகளின் தலைவர்களும், தி.மு.க.வின் தலைவர் மு.க.ஸ்டாலின் வகுத்த வியூகங்களே இந்த மகத்தான வெற்றிக்குக் காரணம். தோழமைக் கட்சிகளை உணர்வுப்பூர்வமாக ஒருங்கிணைத்து, வலுவான கூட்டணியை அமைத்து, மோடிக்கு எதிரான வெற்றியைப் பெறுவதற்கு இந்தியாவிலேயே முதன்மையானவர் என்பதை மு.க.ஸ்டாலின் நிரூபித்திருக்கிறார். தனது மாநிலத்திற்குள் பா.ஜ.க. நுழைய முடியாதபடி தடுத்து, நிறுத்திய ஒரு மாநிலக் கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் மட்டும் தான். தமிழ்நாட்டில் திராவிட இயக்கமும் அதன் கொள்கைகளும் வலுவாக இருப்பதால் இந்த வெற்றி கிடைத்துள்ளது என மனம்திறந்து தெரிவித்திருக்கிறார்கள்.

ஆங்கில ஊடகங்கள் அரசியல் நோக்கர்கள் என அனைத்துத் தரப்பிலும் இதே கருத்து எங்கணும் எதிரொலிக்கிறது. திராவிட இயக்கத்தை அழிக்க, எத்தனை வித்தைகள் செய்தாலும் எத்தனை பேர் குட்டிக்கரணம் போட்டாலும் இங்கே எடுபடாது என்பதே தமிழ்நாட்டு மக்களின் தனிப்பெரும் தீர்ப்பு.

3-வது பெரிய கட்சி

நாடாளுமன்றத்தில் 3-வது பெரிய கட்சி என்ற பெருமையையும் தி.மு.க பெறுகிறது. 1971, 2004 நாடாளுமன்றத் தேர்தல்களில் தி.மு.க. பெற்ற வெற்றிக்கு இணையான வெற்றி இது. சட்டமன்றத்தில் நம்முடைய பலம் 101 ஆக உயர்கிறது. அ.தி.மு.க. வசம் இருந்த 12 தொகுதிகளை இடைத்தேர்தலில் தி.மு.க. கைப்பற்றியிருப்பது தமிழ்நாட்டின் இடைத்தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத சாதனையாகும்.

இவற்றை செரிமானம் செய்துகொள்ள முடியாத ஆட்சியாளர்களும் அரசியல் எதிரிகளும், தி.மு.க.வின் நோக்கம் நிறைவேறவில்லை என தங்கள் புண்ணுக்குத் தாங்களே புணுகு தடவி புளகாங்கிதம் கொள்ளும் வேலையில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்களின் தற்காலிக இன்பத்திற்குத் தடையாக இருக்க நான் விரும்பவில்லை. நமக்கான பெரும்பணிகள் நிறைய காத்துக் கொண்டு இருக்கின்றன.

மக்கள் நம் மீது அசையா நம்பிக்கை வைத்து அளித்துள்ள இந்த மகத்தான வெற்றிகளுக்காகச் சூட்டப்படும் புகழ் மாலைகள் அனைத்தும், நம்மை நாளும் வளர்த்தெடுத்து நல்ல வழிகாட்டி குறைவின்றி நெறிப்படுத்திய கருணாநிதிக்கு உரியவை. அவரிடம் நான் கற்றுக்கொண்டது, உழைப்பு, ஓயாத உழைப்பு.

அவர் வருவார், இவர் வருவார்...

கருணாநிதி இல்லாத நிலையில், தி.மு.க.வின் தலைமைப் பொறுப்பை ஏற்றுச் சுமக்க வேண்டிய கடுமையான பணியுடன், தலைவர் இல்லாத காரணத்தால், தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டு விட்டதாகவும் தி.மு.க.வுக்கு இனி எதிர்காலம் இல்லை என்றும் வெற்றிடத்தை நிரப்புவதற்காக அவர் வருவார், இவர் வருவார் என்றும் சூழ்ச்சி எண்ணத்துடன் திட்டமிட்டு தி.மு.க.வை அழிக்க நினைத்த திரிபுவாத சக்திகளுக்கு ஜனநாயக ரீதியாக கொடுக்கப்பட்ட தக்க பதிலடி தான் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் களங்களில் நமக்கு மக்கள் அளித்துள்ள இந்த அருமையான வெற்றி.

பொய் நெல்லைக் குத்தி, புரளிச் சோறு பொங்க நினைத்தவர்களை, வாக்கு எனும் அகப்பைக்கரண்டியால் வாக்காளர்கள் துரத்தியடித்திருக்கிறார்கள். என்றும் தங்கள் நம்பிக்கைக்குரிய இயக்கம், எப்போதும் நம்பிக்கையைக் காப்பாற்றும் இயக்கம் தி.மு.க. தான் என்பதை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி பெற வைத்து நிரூபித்திருக்கிறார்கள்.

ஒருங்கிணைந்து செயல்படுவோம்

பெரு வெற்றியையும், படுதோல்விகளையும் தி.மு.க. சமமாகவே பாவித்து எதிர்கொண்டு எத்தகைய நெருக்கடி, நெருப்பாற்றிலும் எதிர் நீச்சல் போட்டு கரையேறும் அரிய ஆற்றல் கொண்டது. இந்த மகத்தான இந்த வெற்றிக்கு நிச்சயமாக நான் மட்டுமே சொந்தம் கொண்டாட முடியாது. ஓயாமல் உழைத்த நிர்வாகிகள், தொண்டர்கள் இல்லாமல் வெற்றி இந்த அளவுக்குச் சாத்தியமாகியிருக்காது. ஆட்சியாளர்களின் அதிகார வரம்பு மீறல்களை எதிர்கொண்டு, களத்தில் சிறப்பாக செயல்பட்ட தி.மு.க.வினரும், தோழமைக் கட்சியினரும் இந்த வெற்றியின் முக்கிய பங்குதாரர்கள்.

எதற்காக இந்த வெற்றியைத் தமிழக மக்கள் நமக்கு வழங்கினார்களோ, என்ன வாக்குறுதிகளை நாம் மக்களிடம் அளித்தோமோ, அவர்களின் உத்தரவினைப் பெற்று நம் கடன் தொண்டூழியம் செய்வதே எனக் கொண்டு, நிறைவேற்றுகிற பெரும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. நாடாளுமன்றத்திலும், சட்டசபையிலும் மக்கள் நலன் காக்கும் உரிமைக்குரலாக தி.மு.க. ஓங்கி ஒலிக்கும். மக்களுக்கெதிரான பிளவு சக்திகள் தமிழ்நாட்டில் தலையெடுக்காதவாறு விழிப்புடன் காவல்காக்கவேண்டிய கடமையும் பொறுப்பும் கொண்ட கொள்கைத் தோழமையுடன் ஒருங்கிணைந்து செயல்படுவோம்.

வெற்றிப்பயணம்

மாநில நலன்களும் உரிமைகளும் பறிபோகாமல் தடுக்கவும், பறிபோனவற்றை மீட்டெடுக்கவும், ஜனநாயகம் காக்கவும் அமைதியான அற வழியிலான போராட்டம் அயராமல் தொடரும். மத நல்லிணக்க சக்திகளை ஒருங்கிணைக்கும் தமிழ்நாடு வியூகத்தை பிற மாநிலங்களிலும் செயல்படுத்திட தி.மு.க. ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

இனி வரும் காலம், மாநிலங்களை மையப்படுத்தும் ஆக்கபூர்வ அரசியலுக்கான காலம். மத்தியில் எந்த அரசு அமைந்தாலும் எந்தவொரு மாநிலத்தையும் அலட்சியம் செய்துவிட முடியாது. அனைத்து தேசிய இனங்களையும் ஆதரித்து அரவணைத்துச் செல்ல வேண்டிய நேரம் இது. இந்தி பேசும் மாநிலங்களே இந்தியா என்ற காலமெல்லாம் மலையேறிவிட்டது. மக்களின் நலன் காக்கும் தி.மு.க.வின் முற்போக்கு வெற்றிப் பயணம் தொடரும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story