கள்ளத்தொடர்பை கைவிடாததால் இளம்பெண்ணை கொன்றுவிட்டு, காதலன் கொன்றதாக நாடகமாடிய உறவினர்கள்


கள்ளத்தொடர்பை கைவிடாததால் இளம்பெண்ணை கொன்றுவிட்டு, காதலன் கொன்றதாக நாடகமாடிய உறவினர்கள்
x
தினத்தந்தி 25 May 2019 10:15 PM GMT (Updated: 25 May 2019 7:26 PM GMT)

கள்ளத்தொடர்பை கைவிடாததால் இளம்பெண்ணை அவருடைய உறவினர்களே கொடூரமாக கொன்றுவிட்டு, அவருடைய கள்ளக்காதலன் கொன்றதாக திசை திருப்பிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம்,

கள்ளத்தொடர்பை கைவிடாததால் இளம்பெண்ணை அவருடைய உறவினர்களே கொடூரமாக கொன்றுவிட்டு, அவருடைய கள்ளக்காதலன் கொன்றதாக திசை திருப்பிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிய வைத்து அரசு நிவாரணமாக ரூ.4 லட்சத்தை மோசடியாக பெற்றதும் தற்போது அம்பலமாகி உள்ளது.

இளம்பெண்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அபிராமத்தை அடுத்த டி.வல்லக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் மாயாண்டி. அவருடைய மகள் ராதிகா (வயது 22).

இவருக்கும் பார்த்திபனூர் அருகே உள்ள பிச்சப்பனேந்தல் கிராமத்தை சேர்ந்த அருண்குமார்(30) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனிடையே கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த ஒரு வருடமாக ராதிகா தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.

அப்போது, ராதிகாவுக்கும், பக்கத்து கிராமத்தை சேர்ந்த கருப்பசாமி என்ற வாலிபருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை உறவினர்கள் கண்டித்தனர்.

கருகிய நிலையில் பிணம்

இந்த நிலையில் ராதிகா, கடந்த ஏப்ரல் மாதம் 29-ந் தேதி வீட்டின் அருகே உள்ள கண்மாய் கரையில் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய அபிராமம் போலீசார், அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

ராதிகாவின் சாவில் மர்மம் இருப்பதாக போலீசாருக்கு தகவல்கள் வந்தன. இதையடுத்து பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. கள்ளக்காதலன் கருப்பசாமிதான் ராதிகாவை கொன்றிருப்பதாக புகார் தெரிவித்த ராதிகா தரப்பினர் வன்கொடுமை தடுப்புச்சட்டத்திலும் வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தினர். மேலும் அரசின் நிதி உதவி கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதுவரை ராதிகாவின் உடலை வாங்கவும் மறுத்துவிட்டனர்.

இவ்வாறு தொடர்ந்து 6 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இளம்பெண் ராதிகாவின் மரணத்துக்கு அரசு நிவாரணமாக ரூ.8 லட்சத்து 25 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதில் முதல் தவணையாக ரூ.4 லட்சத்து 12 ஆயிரத்து 500-ஐ அவரது குடும்பத்தினரிடம் அதிகாரிகள் வழங்கினர். அதன் பின்னர் ராதிகாவின் உடலை வாங்கிச்சென்று அடக்கம் செய்தனர்.

6 பேர் கைது

இந்த நிலையில் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கள்ளத்தொடர்பை கைவிடாததால் ஆத்திரத்தில் ராதிகாவை அவருடைய உறவினர்கள் அடித்து கொடூரமாக கொன்றுவிட்டு, உடலை கண்மாய் கரையில் மண்எண்ணெயை ஊற்றி தீவைத்து எரித்துள்ளனர். ஆனால், நடந்ததை மறைத்து கவுரவ கொலையாக வழக்கை திசை திருப்பி, அரசின் நிவாரண நிதியையும் பெற்று பெரும் மோசடி செய்திருப்பது இந்த வழக்கில் பரபரப்பு திருப்பத்தை தற்போது ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த வழக்கில் துப்பு துலங்கியதை அடுத்து, ராதிகா கொலை தொடர்பாக அவருடைய உறவினர்களான முருகன் (24), மோகன் (20), அழகர்சாமி(23), முனியசாமி (40), பாப்பா (45) மற்றும் 17 வயது சிறுவன் என 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

போலீஸ் சூப்பிரண்டு பேட்டி

ராதிகா கொலை குறித்தும், அதன்பின்னர் நடந்த மோசடி குறித்தும் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம் பிரகாஷ் மீனா கூறியதாவது:-

சம்பவத்தன்று இளம்பெண் ராதிகா, தனது கள்ளக்காதலன் கருப்பசாமியை சந்தித்த போது, ராதிகாவின் உறவினரான முருகன் உள்ளிட்டோர் பார்த்து கண்டித்துள்ளனர். அப்போது ராதிகா, நான் தான் காதலரை வரவழைத்தேன் என்று கூறி முருகன் உள்ளிட்டோரை மனம் நோகும்படி பேசியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த முருகன், அவருடைய தாயார் பாப்பா மற்றும் மோகன், அழகர்சாமி ஆகியோர், ராதிகா வீட்டு வாசலில் ஒரு சிறுவனை காவலுக்கு வைத்துவிட்டு உள்ளே சென்று ராதிகாவை பலமாக தாக்கி சுவரில் மோதவைத்து கொலை செய்துவிட்டு, உடலை அருகில் உள்ள வீட்டிற்குள் மறைத்து வைத்துள்ளனர்.

இரவில் ராதிகாவின் தாய் கஸ்தூரி மகளை காணாது தேடினார். அப்போது, முருகன், பாப்பா உள்ளிட்டோரும் ராதிகாவை தேடுவது போல் நாடகமாடி இருக்கிறார்கள். பின்னர் நள்ளிரவில் முருகன் உள்ளிட்டோர் உறவினர் சேர்ந்து, ராதிகாவின் உடலை கொண்டு சென்று மண்எண்ணெய் ஊற்றி எரித்துள்ளனர். இந்த சம்பவத்தில் தாங்கள் மாட்டிக்கொள்ளக்கூடாது என்பதற்காகவும், ராதிகாவின் தாய்க்கு அரசின் நிவாரணம் கிடைக்கும் என்று மனமாற்றம் செய்து, அவருடைய கள்ளக்காதலன் மீது கொலைப் பழிபோட வைத்து புகார் கொடுக்க வைத்தனர். ஆனால், ராதிகாவின் கள்ளக்காதலனான கருப்பசாமியை விசாரித்தபோது கொலை செய்ததற்கான ஆதாரங்களோ, சாட்சிகளோ கிடைக்கவில்லை.

சிறையில் அடைப்பு

இதுதவிர, பிரேத பரிசோதனை செய்தபோது ராதிகா கொலை செய்யப்பட்டு பின்னர் தீவைத்து எரிக்கப்பட்டதாக ஆதாரங்களின் அடிப்படையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய முருகன், மோகன், அழகர்சாமி, முனியசாமி, முருகனின் தாய் பாப்பா மற்றும் சிறுவன் என 6 பேரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

பின்னர் 6 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். 17 வயது சிறுவன் பாளையங்கோட்டை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும், மற்றவர்கள் மதுரை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

இளம்பெண்ணை உறவினர்களே கொலை செய்த நிலையில் அதற்கான தடயங்கள், ஆதாரங்களை மறைத்து போலியான ஆதாரங்களையும் உருவாக்கி, தவறான தகவல் கொடுத்து மற்றொருவர் மீது வீண் பழி சுமத்தியதுடன், வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய வைத்து, அரசின் நிதியையும் தவறாக பெற்றது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளனர். எனவே இந்த மோசடியிலும், கொலைக்கு உடந்தையாகவும் இருந்த மேலும் சிலரை தேடிவருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story