காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில் வீதியுலாவில் திருமங்கை ஆழ்வார் பாசுரம் பாடுவதில் தகராறு; இருபிரிவினர் மோதல்


காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில் வீதியுலாவில் திருமங்கை ஆழ்வார் பாசுரம் பாடுவதில் தகராறு; இருபிரிவினர் மோதல்
x
தினத்தந்தி 25 May 2019 10:15 PM GMT (Updated: 25 May 2019 7:33 PM GMT)

காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில் வீதியுலாவில், திருமங்கை ஆழ்வார் பாசுரம் பாடுவதில் தகராறு ஏற்பட்டது.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில் வீதியுலாவில், திருமங்கை ஆழ்வார் பாசுரம் பாடுவதில் தகராறு ஏற்பட்டது. அப்போது இருபிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டது.

கைகலப்பு

காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இதனையொட்டி தினமும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடந்து வருகிறது. வீதியுலாவின்போது சாமிக்கு முன்னும் பின்னும் 2 பிரிவினர் வேதமந்திரங்களையும், பாசுரங்களையும் பாடிக்கொண்டு செல்வார்கள்.

இதன்படி 8-ம் நாள் உற்சவமான நேற்று குதிரை வாகனத்தில் வரதராஜபெருமாள் வீதியுலா வந்தார். திருக்கச்சிநம்பி தெருவில் வந்தபோது ஒரு பிரிவினர் திருமங்கை ஆழ்வார் பாசுரம் பாட முயன்றனர். இதற்கு கோவில் அர்ச்சகர்களும், மற்றொரு பிரிவினரும் எதிர்ப்பு தெரிவித்து, பாடவிடாமல் தடுத்தனர். இதனால் 2 தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர் அது கைகலப்பாக மாறியது.

பரபரப்பு

குதிரை வாகன உற்சவத்தின்போது இரு பிரிவினரும், சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் முன்னிலையிலேயே கைகலப்பில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. உடனே போலீசார் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.

ஆண்டுதோறும் பிரம்மோற்சவத்தின்போது இரு பிரிவினரும் மோதிக்கொள்வது வாடிக்கையாகி வருவது பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதனை கோவில் நிர்வாகமும், போலீசாரும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Next Story