கன்னியாகுமரியில் பல்வேறு இடங்களில் காலை முதல் கனமழை


கன்னியாகுமரியில் பல்வேறு இடங்களில் காலை முதல் கனமழை
x
தினத்தந்தி 10 Jun 2019 2:15 AM GMT (Updated: 10 Jun 2019 2:05 AM GMT)

கன்னியாகுமரியில் பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது.

கன்னியாகுமரி,

தென்மேற்கு பருவமழை கடந்த 1ந்தேதி தொடங்க வேண்டிய நிலையில், இந்த ஆண்டு பருவமழை தாமதமாக தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.  இதனால் ஒரு வாரத்திற்கு பின் கேரளாவில் கடந்த சனிக்கிழமை தென்மேற்கு பருவமழை தொடங்கியது.

இதனை தொடர்ந்து கேரளா மற்றும் தமிழகத்தின் மேற்கு பகுதி மாவட்டங்கள், லட்சத்தீவுகளின் பல பகுதிகள், தெற்கு அரேபிய கடற்பகுதிகளில் மழை மற்றும் கனமழை பெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த சூழலில் கன்னியாகுமரியின் பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது.  கன்னியாகுமரியின் களியக்காவிளை, குழித்துறை, மார்த்தாண்டம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 மணிநேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது.

இதேபோன்று திற்பரப்பு, முஞ்சிறை, கோதையார், திருவட்டார், குலசேகரம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.  தக்கலை, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை முதல் லேசான மழை பெய்து வருகிறது.

இந்திய வானிலை ஆய்வு மையம், மணிக்கு 60 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும்.  இதனால் அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.  இதன்படி, குளச்சல் பகுதியில் சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.  இதனை தொடர்ந்து, அப்பகுதியில் நாட்டுப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

Next Story