சென்னை மக்களின் தாகத்தை தணிக்கும் குடிநீர் லாரிகள்


சென்னை மக்களின் தாகத்தை தணிக்கும் குடிநீர் லாரிகள்
x
தினத்தந்தி 20 Jun 2019 10:45 PM GMT (Updated: 20 Jun 2019 7:52 PM GMT)

சென்னை மக்களின் தாகம் குடிநீர் லாரிகள் மூலம் தணிக்கப்பட்டு வருகிறது. பம்பரம் போல் சுழன்று லாரி டிரைவர்கள் பணியாற்றுகிறார்கள்.

சென்னை,

வறட்சியின் பிடியில் சிக்கி உள்ள சென்னையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினை இருந்து வருகிறது. குடிநீர் ஆதாரமாக திகழ்ந்த ஏரிகள் வறண்டு போய் உள்ளன. நிலத்தடி நீர்மட்டமும் அதால பாதாளத்துக்கு சென்றுவிட்டது. காலிகுடங்களுடன் பொதுமக்கள் தண்ணீரை தேடி அலைகிறார்கள். நீர் ஆதாரங்களை தேடி குடிநீர் வாரிய அதிகாரிகள் ஓடுகிறார்கள். ஏரிகளும், நிலத்தடி நீர்மட்டமும் கைவிட்டுள்ள நிலையில், குடிநீர் தேவையை சமாளிக்க தண்ணீர் லாரிகள் கைகொடுத்து வருகின்றன.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாய கிணறுகள், கல்குவாரிகள், கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் போன்ற நீர் ஆதாரங்களில் இருந்து சென்னை நகரின் குடிநீர் தேவையை சமாளிக்க தண்ணீர் பெறப்படுகிறது. இந்த தண்ணீர் குடிநீரேற்று நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு லாரிகள் மூலம் சென்னை மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.

சென்னை குடிநீர் வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் 900 லாரிகள் ஓடுகின்றன. இந்த லாரிகள் மூலம் நகர் முழுவதும் தண்ணீர் சப்ளை நடைபெற்று வருகிறது.

லாரி டிரைவர்கள் சிறப்பான சேவை

சென்னை நகரின் முக்கிய வீதிகளுக்கு 9 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரிகள் மூலமாகவும், குறுகிய தெருக்களுக்கு 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உடைய லாரிகள் மூலமாகவும், மிகவும் குறுகிய சந்துகளில் பிளாஸ்டிக் தொட்டி பொருத்தப்பட்ட வாகனங்கள் மூலமாகவும் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

தண்ணீர் லாரிகள் வருவதை பார்த்தவுடன் பொதுமக்கள் முகத்தில் இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்படுகிறது. காலிகுடங்களுடன் வரிசையில் நின்று தண்ணீரை பிடித்து செல்கிறார்கள்.

பம்பரம் போல் சுழன்று பொதுமக்களின் தாகம் தீர்க்கும் பணியில் குடிநீர் வாரிய லாரி டிரைவர்கள் சிறப்பான சேவையை ஆற்றி வருகிறார்கள். அன்றாடம் அதிகாலை முதல் நள்ளிரவு வரை தொடர்ந்து உழைக்கிறார்கள். சென்னை நகரின் சாலைகளில் குடிநீர் வாரிய லாரிகள் ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டிருப்பதை காண முடிகிறது.

இதுகுறித்து குடிநீர் வாரிய லாரி டிரைவர்கள் சிலர் கூறும்போது, ‘தூக்கம் மறந்து, பசி மறந்து ஓய்வில்லாமல் உழைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் ஒரு சில இடங்களில் தண்ணீர் கொண்டு செல்வதற்கு சற்று தாமதம் ஆனால் கூட சிலர் கேவலமாக திட்டுகிறார்கள். இது வருத்தம் அளிக்கிறது. எங்களை ஊக்குவிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, திட்டாமல் இருந்தால் போதும்.’ என்றனர்.

பெண்கள் குற்றச்சாட்டு

சென்னை நகரில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து தி.மு.க. சார்பில் நேற்று வார்டுவாரியாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெற்குன்றம் மேட்டுக்குப்பத்தில் தி.மு.க. வட்ட செயலாளர் கமலகண்ணன் தலைமையில் பெண்கள் காலிகுடங்களுடன் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அப்பகுதியை சேர்ந்த பெண்கள் கூறியதாவது:-

மேட்டுக்குப்பம் நடேசன் நகரின் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் குடியிருப்பு உள்ளது. அந்த குடியிருப்பு பகுதிக்குள் மட்டும் குடிநீர் லாரிகள் வருவதும், போவதுமாக இருக்கின்றன. எங்கள் பகுதிக்குள் எப்போதாவது தான் தண்ணீர் லாரிகள் வருகிறது.

அந்த லாரியில் தண்ணீர் பிடிக்கவும் கடுமையான கூட்டம் ஏற்படுகிறது. இதனால் பாதி பேருக்கு தண்ணீர் கிடைக்கிறது. மீதி பேருக்கு தண்ணீர் கிடைக்காமல் ஏமாற்றம் அடையும் நிலை இருக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story