என்ஜினீயரிங் கலந்தாய்வு தரவரிசை பட்டியல் முதல் 10 மாணவர்களில் 7 பேர் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள்


என்ஜினீயரிங் கலந்தாய்வு தரவரிசை பட்டியல் முதல் 10 மாணவர்களில் 7 பேர் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள்
x
தினத்தந்தி 20 Jun 2019 10:00 PM GMT (Updated: 20 Jun 2019 8:07 PM GMT)

என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் கே.பி.அன்பழகன் நேற்று வெளியிட்டார்.

சென்னை, 

என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் கே.பி.அன்பழகன் நேற்று வெளியிட்டார். இதில் முதல் 10 இடங்களை பிடித்தவர்களில் 7 பேர் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள் ஆவார்கள்.

என்ஜினீயரிங் கலந்தாய்வு

என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வந்தது. இந்தநிலையில் இந்த ஆண்டு முதல் தொழில் நுட்ப கல்வி இயக்ககம் என்ஜினீயரிங் கலந்தாய்வை நடத்துகிறது.

கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஆன்லைன் மூலம் தான் இந்த ஆண்டும் கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகளில் தொழில் நுட்ப கல்வி இயக்ககம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

விண்ணப்பிப்பது, ரேண்டம் எண், சான்றிதழ் சரிபார்ப்பு, தரவரிசை பட்டியல், சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு, பொது கலந்தாய்வு மொத்தம் 6 நிலைகளில் கலந்தாய்வு நடத்தப்பட இருக்கிறது.

தரவரிசை பட்டியல் வெளியீடு

விண்ணப்பப்பதிவு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், ரேண்டம் எண் கடந்த 3-ந் தேதி வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கடந்த 7-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை 46 என்ஜினீயரிங் சேவை மையங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. அதையடுத்து நேற்று தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.

தரவரிசை பட்டியலை உயர் கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டார். இதில் உயர் கல்வி துறை செயலாளர் மங்கத்ராம் ஷர்மா, தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் ஆணையர் விவேகானந்தன், என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

10 இடங்களை பிடித்த மாணவர்கள்

தரவரிசை பட்டியலை www.tne-a-o-n-l-i-ne.in, www.tndte.gov.in என்ற இணையதளங்களில் மாணவ-மாணவிகள் சென்று தெரிந்து கொள்ளலாம். தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்தவர்களின் பெயர் விவரம் வருமாறு:-

1) ஜி.அரவிந்த் (கட் ஆப் மதிப்பெண்-200) - மாநில பாடத்திட்டம், 2) ஹரிஷ்பிரபு (கட் ஆப் மதிப்பெண்-200) - மாநில பாடத்திட்டம், 3) பிரதீபா செந்தில் (கட் ஆப் மதிப்பெண்-200) - பிற பாடத்திட்டம், 4) லல்லு பிரசாத் (கட் ஆப் மதிப்பெண்-199.75) - மாநில பாடத்திட்டம், 5) ஆர்.சிவ்சுந்தர் (கட் ஆப் மதிப்பெண்-199.5) - சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம், 6) எஸ்.ஸ்ரீபிரியன் (கட் ஆப் மதிப்பெண்- 199.5) - மாநில பாடத்திட்டம், 7) வினோதினி (கட் ஆப் மதிப்பெண்-199.5) - மாநில பாடத்திட்டம், 8) ஆர்.ஜோன் ஜெனிபர் (கட் ஆப் மதிப்பெண்-199.5) - மாநில பாடத்திட்டம், 9) ஜி.கார்த்திக் பாலாஜி (கட் ஆப் மதிப்பெண்-199.5) - சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம், 10) கே.கவுசிக் (கட் ஆப் மதிப்பெண்-199.5) - மாநில பாடத்திட்டம்.

முதல் இடம் பிடித்த அரவிந்த் சென்னையை சேர்ந்தவர். 2-ம் இடம் பிடித்த ஹரிஷ்பிரபு தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்தவர் ஆவர்.

மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள்

தரவரிசை பட்டியல் வெளியிட்ட பின்னர், அமைச்சர் கே.பி.அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் உள்ள 479 என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 940 இடங்கள் உள்ளன. இந்த இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகிறது. என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு மொத்தம் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 116 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அதில் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 406 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வந்திருந்தனர்.

சான்றிதழ் சரிபார்ப்பு முடிவில், ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 150 பேர் தகுதியானவர்களாக அடையாளம் காணப்பட்டு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதில் ஒரு லட்சத்து ஆயிரத்து 692 பேர் பொது கலந்தாய்வுக்கும், 1,452 பேர் தொழில் முறை கல்வி படிப்புக்கும் விண்ணப்பித்துள்ளனர்.

தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்தவர்களில் 7 பேர் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள் ஆவார்கள். 2 பேர் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தையும், ஒரு மாணவி பிற பாடத்திட்டத்தையும் படித்தவர்கள் ஆவர்.

பொது கலந்தாய்வு

தரவரிசை பட்டியல் வெளியானதை தொடர்ந்து சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு வருகிற 25-ந் தேதி தொடங்கி 27-ந் தேதி வரை நடக்கிறது. மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு 25-ந் தேதியும், முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளுக்கு 26-ந் தேதியும், விளையாட்டு வீரர் பிரிவினருக்கு 27-ந் தேதியும் நேரடி கலந்தாய்வு நடைபெற உள்ளது.

26-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை தொழில்முறை கலந்தாய்வு நடக்கிறது. பொது கலந்தாய்வு அடுத்த மாதம் (ஜூலை) 3-ந் தேதி தொடங்கி 27-ந் தேதி வரை நடக்கிறது. துணை கலந்தாய்வு 29-ந் தேதியும், எஸ்.சி. (ஏ) பிரிவில் காலியாக இருக்கும் இடங்களில் எஸ்.சி. பிரிவினருக்கு மாற்றம் செய்து 30-ந் தேதியும் கலந்தாய்வு நடைபெற இருக்கிறது.

85 ஆயிரம் இடங்கள் பூர்த்தியாகும்

அண்ணா பல்கலைக்கழக துறைகள் மற்றும் உறுப்புக்கல்லூரிகளில் 8 பாடப்பிரிவுகள் மூடப்பட்டுவிட்டன. இதனால் கடந்த ஆண்டை விட அண்ணா பல்கலைக்கழகத்தில் 270 இடங்கள் குறைந்து இருக்கின்றன. அண்ணா பல்கலைக்கழகம் கட்டணம் நிர்ணயித்து ஒப்புதலுக்கு அனுப்பியது.

அதில் இளங்கலை படிப்புகளுக்கு அவர்கள் நிர்ணயித்த கட்டணத்தில் 30 சதவீதத்தையும், முதுகலை படிப்புகளுக்கு அவர்கள் நிர்ணயித்த கட்டணங்களில் 20 முதல் 25 சதவீதத்தையும் குறைத்து அவர்களுக்கு அனுப்பி இருக்கிறோம். அவர்கள் சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு செய்து அந்த கட்டணத்தை அறிவிப்பார்கள்.

கடந்த ஆண்டில் ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 117 இடங்களில் 77 ஆயிரத்து 450 இடங்கள் பூர்த்தி ஆகின. இந்த ஆண்டு 85 ஆயிரம் இடங்கள் வரை பூர்த்தி ஆகும் என்று எதிர்பார்க்கிறோம். கூடுதல் தகவல்களுக்கு 044-22351014, 22351012, 22350523, 22350527, 22350529 என்ற எண்ணுக்கு வேலைநாட்களில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story