ஆவடி பசுமை பூங்கா உள்பட ரூ.1,000 கோடி புதிய திட்டங்கள் ஒரே நாளில், எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்


ஆவடி பசுமை பூங்கா உள்பட ரூ.1,000 கோடி புதிய திட்டங்கள் ஒரே நாளில், எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்
x
தினத்தந்தி 21 Jun 2019 11:45 PM GMT (Updated: 21 Jun 2019 7:52 PM GMT)

ஆவடி பசுமை பூங்கா உள்பட தமிழகம் முழுவதும் ஒரே நாளில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கட்டிடங்கள், மேம்பாலங்களை ஒரே நாளில் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச்செயலகத்தில், பொதுப்பணித்துறையின் கீழ் செயல்படும் நீர்வள ஆதாரத்துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில், பருத்திப்பட்டு ஏரியின் சுற்றுச்சூழலை மீட்டெடுக்கும் பொருட்டு 28 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பருத்திப்பட்டு ஏரி பசுமை பூங்காவை காணொலிக்காட்சி மூலமாக திறந்துவைத்தார்.

இந்த பூங்கா தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் ஏரியை சுற்றிலும் 3 கிலோ மீட்டர் நீளத்திற்கு பொது மக்கள் நடை பயிற்சி மேற்கொள்ள நடைபாதை, திறந்தவெளி அரங்கம், பார்வை மேடைகள், விளையாட்டு உபகரணங்கள், வாகனம் நிறுத்துமிடம், சிற்றுண்டி கட்டிடம், படகு குழாம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், திருவள்ளூர் மாவட்டம், கொசஸ்தலையாற்றின் குறுக்கே 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை, வேலூர் மாவட்டம், மலட்டாற்றின் குறுக்கே 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நிலத்தடி தடுப்புச்சுவர், சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், கொளத்தூர் கிராமம் பெரியபள்ளம் ஓடையின் குறுக்கே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை உள்பட மொத்தம் 217 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொதுப்பணித் துறையின் நீர்வள திட்டங்கள் மற்றும் கட்டிடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 425 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட ஆரணி முதல் விழுப்புரம் வரையிலான ஆற்காடு-விழுப்புரம் மாநில நெடுஞ்சாலையினை காணொலிக்காட்சி மூலமாக எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். மேலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 209 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 14 பாலங்கள் மற்றும் 3 ரெயில்வே மேம்பாலங்களையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அவர் திறந்துவைத்தார்.

வேளாண்மைத்துறை சார்பில் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், பெதப்பம்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 10,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக்கிடங்கினை காணொலிக்காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது. மேலும், வேளாண்மைத்துறை சார்பில் 171 கோடியே 6 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து, 70 கோடியே 47 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.சி.கருப்பணன், பென்ஜமின், மாபா பாண்டியராஜன், சேவூர் ராமச்சந்திரன், உடுமலை ராதாகிருஷ்ணன், துரைக்கண்ணு, தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அரசு செயலாளர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டு மொத்தமாக நேற்று மட்டும் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பல்வேறு முடிவுற்ற திட்டங்களை எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

Next Story