சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன்  கூடிய மழை
x
தினத்தந்தி 22 Jun 2019 1:33 PM GMT (Updated: 22 Jun 2019 1:33 PM GMT)

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

சென்னை,

தமிழகத்தில் ‘கத்திரி’ வெயில் காலம் முடிந்த பின்னரும் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெயில் அளவு குறையவில்லை. சென்னையில் இயல்பான அளவை விட 2 டிகிரி முதல் 4 டிகிரி கூடுதலாக வெப்பம் நிலவியது. பகலில் அனல் காற்று வீசியது.

தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினை ஒருபுறமும், வெப்பத்தின் தாக்கம் மறுபுறமும் மக்களை வாட்டி வதைத்தது. வெப்பச் சலனம் காரணமாகவும், தென்மேற்கு பருவமழை தாக்கத்தாலும் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வந்தாலும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவியது.

தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சத்தில் இருந்து விடுபட மழை வேண்டி கோவில்களில் சிறப்பு யாகங்களும், பூஜைகளும் நடத்தப்பட்டு வந்தன. எப்போது மழை பெய்யும்? என்று  மக்கள் எதிர்நோக்கி காத்திருந்தனர்.

இந்நிலையில்,  சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், வடபழனி, மீனம்பாக்கம், வேளச்சேரி, அமைந்தகரை , மேடவாக்கம், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, கேளம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் பலத்த இடியுடன் மழை பெய்து வருகிறது.

காஞ்சிபுரம்,  தாம்பரம் சாலை, செங்கல்பட்டு சாலை, வாலாஜாபாத் குன்றத்தூர், திருமுடிவாக்கம், மாங்காடு உள்ளிட்ட சுற்றுவட்டாரப்பகுதிகளில் மழை பெய்து வருகிறது. 

திருவண்ணாமலை,  வந்தவாசி,  பொன்னூர், இளங்காடு செம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.  திருவள்ளூர், திருத்தனி, மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

வேலூரில் அரக்கோணம், சோளிங்கர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் மழையின்றி தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், அதிமுக கழக நிர்வாகிகள் மழை வேண்டி யாகம் செய்யும்படி கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story