கத்திக்குத்து காயங்களுடன் வீட்டில் பிணமாக கிடந்த போலீஸ்காரர் பணிச்சுமையால் தற்கொலையா? போலீஸ் விசாரணை


கத்திக்குத்து காயங்களுடன்  வீட்டில் பிணமாக கிடந்த போலீஸ்காரர்  பணிச்சுமையால் தற்கொலையா? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 22 Jun 2019 10:35 PM GMT (Updated: 22 Jun 2019 10:35 PM GMT)

தன்னைத் தானே கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மானாமதுரை,

மானாமதுரையில் வீட்டில் கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் போலீஸ்காரர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் பணிச்சுமை காரணமாக தன்னைத் தானே கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பெருமாள் கோவில் சேர்ந்தவர் மணிகண்டபிரபு (வயது 31). இவர் மதுரையில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி திருமலாதேவி (29) இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2½ வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த திருமலாதேவி வீட்டின் கதவை திறந்து பார்த்த போது, அங்கு மணிகண்டபிரபு நெஞ்சில் கத்திக்குத்து காயத்துடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

இதைப்பார்த்ததும் அவர் பதறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தார். அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் வீட்டு்க்குள் சென்று மணிகண்ட பிரபு இறந்து கிடந்ததை பார்த்து மானாமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மணிகண்டபிரபுவின் உடலை கைப்பற்றி மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மணிகண்டபிரபு பணிச்சுமை காரணமாக தன்னைத் தானே கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story